திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 16வது வார்டு கன்னியம்மன்பேட்டையில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சென்னை வடகிழக்கு மாவட்டம், மாதவரம் வடக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர திட்டமிட்டது. இதையடுத்து பகுதி துணை அமைப்பாளர் அஜய் தென்னவன் தலைமையில், பள்ளி கட்டிடம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டது. வகுப்பறையில் மாணவ, மாணவிகள் எளிமையாக கல்வி கற்கும் வகையில் என்னும் எழுத்தும் என்ற அடிப்படையில் உயிரெழுத்து, மெய் எழுத்து, எண்கள், காய்கறிகள், பழங்கள், கணித வடிவங்கள் ஓவியங்களாக சுவற்றில் வரையப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு புதிய மேஜை, நாற்காலிகள் பொருத்தப்பட்டு பள்ளி கட்டிடம் முழுவதும் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த பள்ளியை மாணவர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பகுதி துணை அமைப்பாளர் அஜய் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.பகுதி செயலாளர்புழல் நாராயணன் கலந்துகொண்டு வகுப்பறைகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து கல்வி உபகரணங்கள் மற்றும் சிற்றுண்டி வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், கவுன்சிலர் ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள் கண்ணப்பன், தாமரைச்செல்வன் மஞ்சம்பாக்கம் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.