×

போதை பொருட்களை வேரோடு ஒழிப்பது தான் திமுக ஆட்சியின் இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் செய்திகள் ஏதும் வெளிவரவில்லை எனவும், நாங்கள் நடவடிக்கை எடுப்பதால் செய்தியாகிறது. போதை பொருட்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு புதிய வரலாறு படைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

போதை பொருட்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பழனிச்சாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர்:
10.08.2022-ல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். இதுவரை 50,875 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11,59,960 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பாக 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா வழக்கில் 17,280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு ஜன.3.-ம் தேதி உயர் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.களுடன் ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜாமின் வழங்குவதில் கடுமையான எதிர்ப்பை, வங்கிக்கணக்கு முடக்கம், சொத்துக்கள் முடக்கம், உறுதிமொழி பத்திரம் பெறுவதுஉள்ளிட்ட நடவடிக்கைகள் திமுக ஆட்சியில்தான் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகளால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, வழக்கை திறன்பட நடத்தி சிறை தண்டனை பெற்றுதருவதும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் செய்திகள் ஏதும் வெளிவரவில்லை எனவும், நாங்கள் நடவடிக்கை எடுப்பதால் செய்தியாகிறது.

அதிமுக ஆட்சியில் குட்கா மாமூல் பெற்று போதை பொருள் நடமாட்டம் புற்றுநோய் போல் வளர்ந்து வந்தது. முன்னாள் அமைச்சர், அப்போதைய டிஜிபி, போலீஸ் கமிஷனர் பெயரில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் கஞ்சாவும், குட்காவும் தலைவிரித்தாடியது.

அதிமுக ஆட்சில் பரவிய இந்த சமூக தீமையை ஒழிக்க கஞ்சா வேட்டை, ஆய்வுக்கூட்டம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. போதை பொருட்களை வேரோடு ஒழிப்பது தான் திமுக ஆட்சியின் இலக்கு என முதல்வர் கூறினார்.


Tags : DMK ,Chief Minister ,M. K. Stalin , Narcotics, target of DMK regime, Chief Minister M. K. Stalin, TNgov
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...