×

தேவதானப்பட்டி அருகே வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து புதிய வாய்க்கால் வழித்தடம் அமைக்கப்படுமா?

*வீணாக செல்லும் உபரிநீரால் 10 ஆயிரம் ஏக்கர் பயன்பெற வாய்ப்பு

*அ.வாடிப்பட்டி ஊராட்சி பகுதி விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து தரிசு நிலங்களுக்கு புதிய வாய்க்கால் வழித்தடம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியகுளம் வராகநதி ஆறு வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. பெரியகுளம் வராகநதி ஆற்றில், வடுகபட்டியில் ராஜவாய்க்கால் மூலம் பிரிந்து அந்த ராஜவாய்க்கால் நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி புதுக்குளம் கண்மாய் மற்றும் குள்ளப்புரம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த ராஜவாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீர் அனைத்து கண்மாய்களிலும் நிரம்பி பின்னர் அந்த நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் உள்ள கண்மாய்கள் போதிய அளவு நிரம்பி விவசாயம் செழிப்பாக நடைபெற்றுவருகிறது. வேட்டுவன்குளம் கண்மாய்க்கு கிழக்கு பகுதியில் உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விளைநிலங்கள். இங்கு சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட நன்செய், புன்செய் மற்றும் மானாவாரி நிலங்கள் உள்ளன. பெரும்பாலும் மானாவாரி நிலங்களே இங்கு அதிகம் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக வைத்து விவசாயம் நடைபெற்றுவருகிறது. அ.புதூர், ஐந்து ஏக்கர் காலனி, வேலாயுதபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்மாய்கள் மழைக்காலங்கில் அந்த பகுதியில் பெய்யும் மழைநீரால் சேமிக்கப்படுகிறது. இந்த நீரை பயன்படுத்தி குறுகிய காலங்களுக்கு மட்டுமே விவசாய பணிகள் செய்யப்பட்டுவருகிறது.

ஆனால் அதன் அருகில் உள்ள வேட்டுவன்குளம் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் வீனாக ஆற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து அ.வாடிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு புதிய வாய்க்கால் வழித்தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை கானல் நீராகவே இருந்தது. வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து அதன் அருகில் உள்ள வன்னான்கரடு வழியாக புதிய வாய்க்கால் வழித்தடத்தை அமைக்க வேண்டும். இதன் மூலம் அ.வாடிப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள அ.புதூர், வேலாயுதபுரம், ஐந்து ஏக்கர் காலனி உள்ளிட்ட இடங்களில் உள்ள சுமார் 5க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு இந்த நீரை கொண்டு செல்லவேண்டும். இதனால் நேரடியாக 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் பாசன வசதி பெறும்.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.

இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனவே, இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து புதிய வாய்க்கால் வழித்தடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஐந்து ஏக்கர் காலனியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், பொதுவாக தேனி மாவட்டம் என்றாலே பசுமை போர்த்திய இடங்கள் என்றும் விவசாயம் செழிப்பாக நடைபெறும் இடம் என்றும், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் உள்ள இடங்கள் என்றும் சினிமா படங்களில் காண்பிக்கின்றனர். மேலும் மாவட்டத்தில் முக்கிய அணைகள் உள்ளதால் தண்ணீர் உருவாகும் மாவட்டமாகவும் தேனி மாவட்டம் உள்ளது. ஆனால் தண்ணீர் இருந்தும் அதை முறையாக பயன்படுத்த முடியாத சில இடங்கள் தரிசு நிலங்களாகவே இன்று வரை உள்ளது.

அணையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் வறட்சியாக உள்ளது. வருடம் முழுவதும் தண்ணீர் நிரம்பிய கண்மாய் அருகே தரிசு நிலங்கள் உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைகளில் பெய்யும் மழை நீர் பெரியகுளம் சோத்துப்பாறை அணை மற்றும் கும்பக்கரை அருவி வழியாக வராகநதி ஆற்றில் வருகிறது. மழைக்காலங்களில் ஒன்று மற்றும் இரண்டு மாதங்களுக்கு இந்த வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் அனைத்து நீரும் வீணாக ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது.’’ என்றார்.

விவசாயிகளின் வாழ்வு மேம்படும்

அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதிக்கு வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து புதிய வாய்க்கால் வழித்தடம் அமைத்து, மழைக்காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை திருப்பினால் போதும். இதனால் வாய்க்கால் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் போது நிலத்தடி நீர் உயரும். அப்படி நிலத்தடி நீர் உயரும் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும்.

மேலும் இந்த வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து அருகில் உள்ள வன்னான்கரட்டில் ஓரத்தில் புதிய வாய்க்கால் வழித்தடம் அமைத்து மழைக்காலங்களில் கண்மாயில் இருந்து வீணாக செல்லும் உபரி நீரை இந்த வழித்தடத்தில் கொண்டு சென்றால் மானாவாரி நிலங்கள் அனைத்து விவசாயம் செழித்து காணப்படும். இதனால் தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வு மேம்படும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த புதிய வாய்க்கால் வழித்தடத்தை அமைத்து தர வேண்டும் என்றார்.

Tags : naduvankulam ,godhanapatti , Devadanapatti : New drainage route from Jayamangalam Vedtuvankulam Kanmai near Devadanapatti to barren lands.
× RELATED முன் விரோதத்தால் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது