முத்துப்பேட்டை பகுதியில் நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடி பணி-வேளாண் இணை இயக்குனர் துவங்கி வைத்தார்

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியினை ஊக்குவித்து விவசாயிகள் அதிக மகசூல் கூடுதல் லாபமும் பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இந்த திட்டத்தினை சிறப்பாக இவ்வாண்டு செயல்படுத்த உள்ளது. திட்டத்தின்படி முத்துப்பேட்டை வட்டாரத்தில் 18,800 ஏக்கர் நஞ்சை தரிசில் உளுந்து பயிறு சாகுபடியினை செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 நஞ்சை தரிசில் உளுந்து பயிறு சாகுபடி செய்வது கடந்த சில வருடங்களாக மிகவும் குறைந்து விட்டது, அதற்கு காரணமாக விவசாயிகள் சொல்வது கால்நடைகளை வளர்ப்போர் அவிழ்த்து விட்டு விடுவதால் அவை பயிரை சேதப்படுத்துகிறது. மேலும் அறுவடை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு நஞ்சை தரிசில் அறுவடைக்கு முன்னதாகவே உளுந்து பயறு தெளிப்பது மிகவும் குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்காக வேளாண்மை துறை சார்பில் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முன்னோடி விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கொண்ட குழு கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டு உளுந்து பயிர் சாகுபடியினை சிறப்பாக செய்து அதிக மகசூல் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கால்நடைகளை வளர்ப்போர் கால்நடைகளை கட்டி வைத்து வளர்க்குமாறு கேட்டு அந்தந்த கிராமங்களில் ஊராட்சி மன்றங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அத்துமீறும் கால்நடைகளை பிடித்து அடைப்பதற்கு கிராமங்களில் பட்டிகள் ஏற்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையும் வைக்கப்படுகிறது. எப்படியாவது இவ்வாண்டு உளுந்து பயிர் சாகுபடியினை நஞ்சை தரிசில் துவங்கி அதிகமாக விதைக்க வேண்டும் என்று முனைப்போடு வேளாண்மை துறை செயல்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உளுந்து பயறு சாகுபடி செய்யும் திட்டத்தினை திருவாரூர், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆசிர் கனகராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலா செந்தில்நாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குநர் லெட்சுமி காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துக் கொண்ட முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாமிநாதன், நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்வதன் பலன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம், விவசாயிகள் கிடைக்கும் லாபம் ஆகியவை குறித்தும் நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்வதால் மண்வளம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்துப்பேட்டை துணை வேளாண்மை அலுவலர் காத்தையன் செய்திருந்தார். முன்னதாக வேளாண்மை உதவி அலுவலர் பிரசன்னா தேவி வரவேற்றார். எடையூர் வேளாண்மை உதவி அலுவலர் ஹேமா நன்றி கூறினார்.

Related Stories: