₹1.85 கோடி செலவில் கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் கண்ணாடி லிப்ட் வசதியுடன் சீரமைப்பு

*நாளை முதல் சுற்றுலாபயணிகள் பார்வையிட அனுமதி

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி  கலங்கரை விளக்கம் ₹1.85 கோடி செலவில் லிப்ட் வசதியுடன் சீரமைக்கப்பட்டு  நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலாபயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலன்கள் கடந்த 1971ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2019ம் ஆண்டு வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா காரணமாக பார்வையாளர்கள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கலங்கரை விளக்கத்தில்  ₹1 கோடியே 85 லட்சம் செலவில் கண்ணாடியால் ஆன லிப்ட்  மற்றும், கலங்கரை விளக்கத்தின் மேல் நின்று சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக  புதிதாக கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து முக்கடல் சங்கமம்,  விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையின் அழகை பார்த்து ரசிக்கலாம்.

நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பார்வையாளர்கள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். வார நாட்களான  திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு கட்டணமாக ₹10 ம் சிறியவர்களுக்கு ₹5ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.  மேலும் கேமரா கொண்டு செல்ல கட்டணமாக ₹20 வசூலிக்கப்படுகிறது. இந்த தகவலை சென்னை மண்டல கலங்கரை விளக்க இயக்குநர் கார்த்திக் செஞ்சுடர் ஆணையின்படி கன்னியாகுமரி கலங்கரை விளக்க அலுவலர் பிரகாஷ் கூறினார்.

Related Stories: