×

ஆளுநருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவை நடக்காது முதல்வர் மு.க.ஸ்டாலின் செயலை நாடே பாராட்டுகிறது: சபாநாயகர் அப்பாவு பேச்சு

சட்டப்பேரவையில் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையின்போது  நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த தீர்ப்புரையை சட்ட பேரவையில் சபாநாயகர் அப்பாவு நேற்று வழங்கினார். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதியின்படி, அவை கூடியிருக்கும் போது, ஆளுநர் உரை நிகழ்த்தும் போதும், நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ உறுப்பினர் யாரும் பேச்சினாலோ, ஒழுங்கு பிரச்னையினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது. அவ்வாறு தடங்கலோ, குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்கு பெருத்த ஊறு விளைவிப்பதாக கருதப்படும். அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்பெறும்.
9ம் தேதி அன்றுகூட காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள்  கோஷமிட்டனர். ஆளுநர் உரையாற்றும் போது இதை அவர்கள் தவிர்த்து இருக்க வேண்டும்.

இது போன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும். 9ம் தேதி நடந்த சம்பவம், தங்களது உள்ளத்திலிருந்த கருத்துகளை அவர்கள் பேசிவிட்டு சென்றார்களே தவிர, எந்தவிதமான அசம்பாவிதமோ நடக்கவில்லை என்ற காரணத்தினால் தான் என்னுடைய தீர்ப்பை இந்தளவில் நான் நிறுத்திக்கொள்ள விரும்புகின்றேன். அந்த வகையில்தான் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையாற்றியபோது, அவர் பல விஷயங்களை வாசிக்காமல் கடந்து சென்றார். பல விஷயங்களைப் புதிதாக அதனுள்ளே சேர்த்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற ஒரு அரசு, அமைச்சரவை எவ்வாறு ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டுமென்று உரை தயார் செய்து, அதை அமைச்சரவை ஒப்புதல் செய்து, ஆளுநருக்கு அனுப்பி, அதற்கு இசைவு தெரிவிக்கப்படும்.

இது இருக்கலாம் என்று இசைவு தெரிவித்து, எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டு கொடுத்தபின்பு, அந்த உரையை ஆளுநரால் பேரவையில் உரையாற்ற வேண்டும். அவர் பேசியதில் பல குளறுபடிகள் இருந்ததை எல்லோருமே அறிந்தோம். எதற்காக அப்படிச் செய்தார்களென்று தெரியவில்லை. ஆளுநர் உரை வாசிப்பதற்கு மட்டும் தான் அவருக்கு அனுமதி, கடமை, பொறுப்பே தவிர, அதில் உள்ளே இருக்கின்ற கருத்துகளுக்கு அமைச்சரவையும், முதல்வரும் தான் பொறுப்பு. ஆளுநருக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை. கவர்னர் வாசித்து அளிப்பதோடு முடிந்து விட்டது அவருடைய கடமை. அவர் ஒரு நியமிக்கப்பட்ட ஆளுநர் தான் அவர். ஆகவே, அந்த அளவில் அவர் அதைக் கடந்து சென்றதால் ஒரு அசாதாரண சூழல் ஏற்படுகிறது.

அந்த அசாதாரண சூழலில் தான் அவர் பேசி அமர்ந்த பின்பு, முதல்வர் என்னிடம் பேரவை விதி 17ஐ தளர்த்தி பேச வாய்ப்பு கேட்டார். நான் அந்த வாய்ப்பை கொடுத்தேன். முதல்வர் அந்த இடத்தில், அந்த நிமிடத்தில் அந்த முடிவெடுக்கவில்லை என்றால் அனைத்து ஊடகங்களும் அனைத்து பத்திரிகைகளும் உலகம் முழுமைக்கும் அவற்றைப் பரப்பி விடுவார்கள்.  அதை வெளிப்படுத்தி விடுவார்கள். ஆகவேதான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியது இந்த அரசல்ல.  இந்த அவை அல்ல. ஆளுநர் பேசும் போது ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது.  

ஆனால், மதிநுட்பத்தோடு அதை மிக துல்லியமாக அந்த நேரத்திலே முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தச் சட்டமன்றத்தின் மாண்பு காப்பாற்றப்பட்டது என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன். இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுடைய உரிமை எது, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சட்டமன்றம் நடந்து முடிந்த ஆளுநர் உரையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தான் இன்று இந்திய அளவில் பேசப்படுகின்ற மிக முக்கியமான ஒரு பொருளாக இருக்கின்றது. இதனை  நாம் யாரும் மறந்துவிட முடியாது.

கலைஞர், இந்தியாவில் கோட்டையிலே கொடி ஏற்றுவது ஆளுநர் என்ற நிலையை மாற்றினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஏற்ற வேண்டுமென்று சொல்லி, இந்தியாவிற்கு எவ்வாறு பெருமை சேர்த்து தந்தார். இன்றைக்கு சுதந்திர தினத்தன்று கொடியேற்றுகின்றோமோ, அதே நிலையை தான், முதல்வர் இந்தியா முழுவதும் இருக்கின்ற அனைத்து சட்டமன்றங்களிலும் ஆளுநர் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்து காட்டி, இந்தத் தமிழகத்தினுடைய சட்டமன்ற மாண்பு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மாண்பையும் மிக சிறப்பாக காப்பாற்றியுள்ளார்.  

தயவு செய்து, நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். முதல்வரை, நம்முடைய பேரவை மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு ஒட்டு மொத்தமாக, அவருடைய துணிவை பாராட்டி கொண்டிருக்கிறது. இது தான் அரசியல் கட்சியினுடைய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடைய உரிமை. அதை நிலைநாட்டி தந்திருக்கிறார். இதை நான் பாராட்டுகிறேன். சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் போது, ஆளுநரை பற்றியோ அல்லது வேறு யாரை பற்றியோ, பேரவை விதியின்படி, அதற்கு உட்பட்டு பேச வேண்டும். முதல்வரை, நம்முடைய பேரவை மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு ஒட்டு மொத்தமாக, அவருடைய துணிவை பாராட்டி கொண்டிருக்கிறது.

Tags : Chief Minister ,M.K.Stal ,Assembly ,Governor ,Speaker ,Appavu , The nation appreciates Chief Minister M.K.Stal's action of not holding a legislative session to tarnish the Governor: Speaker Appavu's speech
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...