2022ம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 30,900 வழக்குகள் பதிவு: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

புதுடெல்லி: கடந்தாண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக  30,900 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 30,900 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 6,900 வழக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2020ல் கொரோனா காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 23,700 ஆக இருந்தது; 2021ல் 30,800 ஆகவும், 2022ல் 30,900 ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டு, மூன்று வெவ்வேறு பிரிவுகளில் அதிக புகார்கள் அளிக்கப்பட்டன.  31 சதவீத புகார்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமைக்காக வழக்குகள் பதிவாகி உள்ளன.  குடும்ப வன்முறை மற்றும் பிற புகார்கள் 23 சதவீதமும், திருமணமான பெண்களுக்கு வரதட்சணை மற்றும் துன்புறுத்தல் புகார்கள் 15 சதவீதம் பதிவாகி உள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் 55 சதவீதம் வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ‘பொது விசாரணை மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் தொடங்கப்பட்ட பிறகு, ஆணையத்திற்கு வரும் புகார்கள் அதிகரித்துள்ளன’ என்றார்.

Related Stories: