×

சுயமரியாதையை உரசி பார்த்தால் அது எதையும் சுட்டெரித்து விடும்: திமுக எம்.பி கனிமொழி பரபரப்பு பேச்சு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதவதி எத்திராசன் தலைமையில், ‘’இனமான பேராசிரியரின் நூற்றாண்டு விழா’’ கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 500 மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு, புத்தாடைகள், பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்துகொண்டு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். பின்னர் கனிமொழி பேசியதாவது;
இனமானம், தமிழுணர்வு, சுயமரியாதை ஆகியவற்றை உருவகப்படுத்தி பார்த்தோம் என்றால் நம் கண் முன் வந்து நிற்பது பேராசிரியர் உருவம் தான். திமுக.வினரின் மரியாதை மட்டுமில்லாமல், எதிர்க்கட்சியினரின் மரியாதைக்குரியவர் பேராசிரியர்.

கலைஞரும் நம் தலைவரும் எந்த முடிவு எடுக்கவேண்டும் என்றாலும் பேராசிரியர் ஆலோசனை இல்லாமல் எடுக்க மாட்டார்கள். நேற்று முன்தினம் நமக்கு பெருமைக்குரிய நாள், இருப்பினும் அதில் வருத்தமும் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் உள்ள இடத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை இழிவுபடுத்தியுள்ளார் என்றால் அது வருத்தப்படக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் அதையும் தாண்டி நாம் பெருமை கொள்ளும் வகையில்,‘‘நீ யாராக இருந்தாலும் தவறு என்றால் அந்த இடத்திலேயே கண்டிப்பேன்’’ என்று தீர்மானம் நிறைவேற்றியவர் நமது முதல்வர். அவுட் ஸ்டாண்டிங் முதலமைச்சராக நமது முதலமைச்சர் சட்டமன்றத்தில் செயல்பட்டதால், ஸ்டாண்ட் அவுட் ஆனார் கவர்னர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய காரணத்தால் மக்களுக்கு எதிராக, ஜனநாயகத்திற்கு எதிராக பல்வேறு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றி வருகிறது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமும், இதர எதிர்க்கட்சியும் வெளிநடப்பு செய்வோம். ஆனால் ஆளுநர் வெளிநடப்பு என்பது முதல்முறையாக நமது சட்டமன்ற பேரவையில் அரங்கேறி உள்ளது. 1967ம் ஆண்டு நமது பேராசிரியர் நாடாளுமன்றத்தில், ஒன்றிய அரசின் கருவியாக மாநில அரசை துன்புறுத்தும் ஆளுநர் தேவையில்லை என்று பேசியிருந்தார். தமிழ்நாடு முன்னேறிய நாடுகளை தாண்டி சென்றுக்கொண்டு இருக்கிறது, அது தான் திராவிட மாடல் ஆட்சி என்பதை ஒருவருக்கு நாம் பாடமாக எடுத்துகொண்டு இருக்க முடியுமா, மக்கள் நமக்கு வாக்களித்தது மக்கள் பணியாற்ற.

மக்களுக்காக அரசு செய்யும் பணிகளை ஆளுநருக்கு எடுத்துரைப்பதற்கு அல்ல என்பதை ஆளுநர் புரிந்து கொள்ளவேண்டும். எங்கள் தலைவர்கள் எங்களுக்கு அளித்துள்ள இனஉணர்வு, தமிழுணர்வு, சுயமரியாதை ஆகியவை எங்களை விட்டு என்றும் போகாது. எங்கள் உள்ளே அது என்றும் இருப்பது, அதை சற்று உரசி பார்த்தால் எதையும் சுட்டெரிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார். விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, மகளிர் அணி துணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மண்டல குழு தலைவர் சரிதா, சென்னை மாநகராட்சி  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Tags : DMK ,Kanimozhi , Rubbing self-respect will burn anything: DMK MP Kanimozhi's sensational speech
× RELATED இன்று மாலையுடன் முடிவுக்கு வரும்...