×

புதுவையில் பாண்லே பால் லிட்டருக்கு ரூ.4 உயர்ந்தது: இன்று முதல் அமலுக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் கொள்முதல் விலை உயர்வை தொடர்ந்து பால் விற்பனை விலையும் ரூ.4 உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நுகர்வோர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தரம் பிரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் அளவுக்கு பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் ஒரு நாளைக்கு புதுவை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 60 ஆயிரம் லிட்டர் பாலும், தமிழகம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆயிரம் லிட்டர் பாலும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் புதுவையில் பால் கொள்முதல் விலை உள்ளூர் பகுதியில் குறைவாகவும், வெளியூர் பகுதியில் அதிகமாகவும் கொடுத்து பாண்லே நிறுவனம் பாலை கொள்முதல் செய்து வந்தது.

இதனால் கொள்முதல் விலையை விட குறைவான விலைக்கு பாலை விற்பனை செய்யும் நிலை இருந்து வந்தது. ஆகையால் பாண்லே நிறுவனத்தில் ரூ.8 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. பால் கொள்முதலில் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பால் முகவர்கள், தங்களுக்கு பால் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும், பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு பால் கொள்முதல் விலையை தமிழகத்தை போன்று புதுவையிலும் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்தினர்.

இதன் எதிரொலியாக கடந்த வாரம் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு ரூ.34ல் இருந்து ரூ.37 ஆக உயர்த்தி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும் விற்பனை விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பாண்லே நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்ய பால் விற்பனை விலையையும் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதனடிப்படையில் நேற்று பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுவதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தைய்யா அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, பாலின் தரத்தின் அடிப்படையில் டபுள் சமன்படுத்தப்பட்ட பால் (மஞ்சல் நிற பால் பாக்கெட்) லிட்டர் ரூ.42க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமன்படுத்தப்பட்ட பால் (நீலநிற பால் பாக்கெட்) லிட்டர் ரூ.42ல் இருந்து 46க்கும், சிறப்பு சமன்படுத்தப்பட்ட பால் (பச்சை நிற பால் பாக்கெட்) லிட்டர் ரூ.44ல் இருந்து 48க்கும், நிலைப்படுத்தப்பட்ட பால் (ஆரஞ்சு நிற பால் பாக்கெட்) லிட்டர் ரூ.48ல் இருந்து 52க்கும், நிறைகொழுப்பு பால் (சிவப்பு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.62க்கும் விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. காலையில் பாண்லே பால் வாங்க பூத்துக்களுக்கு சென்ற பொதுமக்கள் புதிய விலையின்படி லிட்டருக்கு ரூ.4 வரை அதிகம் கொடுத்து பால் பாக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.

Tags : Panle ,New New , Panle milk hiked by Rs 4 per liter in Puduvai: Effective today
× RELATED வில்லியனூரில் பிரபல ரவுடி பெயரை கூறி தொழிலதிபருக்கு மிரட்டல்