×

வில்லியனூரில் பிரபல ரவுடி பெயரை கூறி தொழிலதிபருக்கு மிரட்டல்

*பாண்லே ஊழியர் உள்பட 2 பேர் கைது

வில்லியனூர் : வில்லியனூரில் பேக்கரி தொழிலதிபரிடம் ரவுடி பெயரை கூறி மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனூர் அடுத்த மடுகரை மெயின் ரோடு டி.வி. நகர் கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் வஜ்ரவேல். இவர் வில்லியனூர் பைபாஸ் சாலை கூடப்பாக்கம் செல்லும் சாலையில் ஓட்டல் மற்றும் பேக்கரி நடத்தி வந்தார். வஜ்ரவேல் பணம் தரமறுத்ததாக கூறி கடந்த 2020ம் ஆண்டு கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவடி தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் வஜ்ரவேலை காரில் கடத்தி சென்று கொலை செய்தனர். இந்த ெகாலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் வஜ்ரவேலின் மனைவி வள்ளியம்மாள் (46), அந்த ஓட்டல் மற்றும் பேக்கரியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வள்ளியம்மாளை செல்போன் மூலம் நான் தாடி அய்யனார் பேசுகிறேன், உன் கணவரை நான் தான் கொலை செய்தேன். எனக்கு உடனடியாக வழக்கு செலவுக்கு ரூ.20 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். மேலும், பணம் தரவில்லையென்றால் என்னுடைய கூட்டாளிகள் உன்னை கொலை செய்து விடுவார்கள் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வள்ளியம்மாள் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

தாடி அய்யனார் ஒரு வழக்கு தொடர்பாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வள்ளியம்மாளுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தது யார்? பிரபல ரவுடி தாடி அய்யனார் கடலூர் சிறையில் இருந்தே பேசினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதே செல்போன் எண் மற்றும் பல்வேறு போன் நம்பரில் இருந்து வள்ளியம்மாளுக்கு பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் வள்ளியம்மாளுக்கு போன் வந்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த செல்போன் எண் சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே பழக்கடை நடத்தி வருபவருடைய எண் என்பது தெரியவந்தது. பிறகு அவரிடம் சென்று விசாரித்தபோது கடந்த சில நாட்களாக பழக்கடை எதிரே உள்ள பாண்லே பூத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் கல்மேடுபேட் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (25) தான் அடிக்கடி என் செல்போனை வாங்கி பேசுவார் என்று தெரிவித்துள்ளார். பிறகு அரவிந்தனை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது அவர் தான் வள்ளியம்மாளுக்கு போன் செய்து பிரபல ரவுடி தாடி அய்யனார் பெயரை கூறி மாமூல் கேட்டு மிரட்டியதாக ஒப்புக்கொண்டார். பிறகு அவருடைய உறவினரான வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்த துரைராஜ் (38) என்பவரின் உதவியுடன் தான் மிரட்டியதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து பாண்டியன் நகர் பகுதியில் இருந்த துரைராஜை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் துரைராஜ் அடிக்கடி பேக்கரிக்கு சென்று பொருட்கள் வாங்குவதாகவும், அப்போது அங்கு பணம் அதிகளவில் வசூல் ஆவதாகவும் அவருக்கு தெரியவந்தது. ஆகையால் வள்ளியம்மாள் குறித்து தகவல்களை விசாரித்துக்கொண்டு அவருடைய செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு தனது உறவினர் அரவிந்தனிடம் கொடுத்து மிரட்டுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து அரவிந்தனும், துரைராஜூம் சேர்ந்து பிரபல ரவுடி தாடி அய்யனார் பெயரை கூறி மாமூல் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். துரைராஜ் மீது ஏற்கனவே போக்சோ, வழிப்பறி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக பிரபல ரவுடிகள் பெயரை கூறி உள்ளூர் ரவுடிகள் தொழிலதிபர்களிடம் ேபான் மூலம் மாமூல் கேட்டு மிரட்டுவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனிடையே வில்லியனூர் தொழிலதிபரை மாமூல் கேட்டு மிரட்டிய நபர்களை 4 நாட்களுக்குள் அடையாளம் கண்டு அவர்களை போலீசார் கைது செய்ததால் போலீசாருக்கு எஸ்.பி. வம்சிதரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post வில்லியனூரில் பிரபல ரவுடி பெயரை கூறி தொழிலதிபருக்கு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Willianur ,Panle ,Madugarai Main Road D.V. Nagar… ,Villianur ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை