ஆடுதுறை 54 ரகமானது ஒரு ஏக்கருக்கு 3,500 கிலோ மகசூல் தரக்கூடியது-நெல் வயல்வெளி தின விழாவில் தகவல்

தோகைமலை: ஆடுதுறை 54 ரகமானது ஒரு ஏக்கருக்கு 3,500 கிலோ மகசூல் தரக்கூடியது என்று புழுதேரியில் நடந்த நெல் வயல்வெளி தின விழாவில் விளக்கப்பட்டது

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சி ரெங்காச்சிப்பட்டியில், புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில், நெல் ஆடுதுறை 54 ரகம் குறித்து முதல் நிலை செயல் விளக்க வயல்வெளி தின நிகழ்ச்சி நடந்தது. ரெங்காச்சிபட்டியில் உள்ள முன்னோடி விவசாயி சேகர் என்பவரது வயலில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் புதிய நெல் ரகமாக அதிக மகசூல் மற்றும் பூச்சி நோய் எதிர்ப்பு திறன்கள் கொண்ட ஆடுதுறை 54 என்ற ரகத்தை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான முதல் நிலை செயல் விளக்கம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நுண்ணூட்டங்கள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதிய ரகத்தை சாகுபடி செய்த வயல்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தகுந்த ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியிட்ட ஆடுதுறை 54 ரகமானது ஒரு ஏக்கருக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மகசூல் தரக்கூடியது. மேலும் இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி நோய் மற்றும் குலை நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட ரகமாகும்.இந்த ரகத்தின் நெல் அரிசியானது அரைவைத்திறன் 73 சதவீதமும். ஆயிரம்  நெல் மணிகளின் எடை 16.5 கிராம் கொண்டதாக உள்ளது.இந்த ரகமானது சுமார் 4 அடி உயரமும், கதிர் உறை 30 செமீ, கதிருக்கு சராசரியாக 320 நெல் மணிகளை கொண்டது என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தோகைமலை வட்டார உதவி வேளாண் அலுவலர் சக்திவேல், வேளாண் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் தமிழ்செல்வி, திருமுருகன், தமிழ்செல்வன், ஆய்வ உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை முன்னோடி விவசாயிகள் சேகர், ராஜேஷ் ஆகியோர் செய்து இருந்தனர். இதில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories: