சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 9வது நாளாக நெசவாளர்கள் வேலை நிறுத்தம்

*ரூ. 2 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு

*3 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

ஆண்டிபட்டி  ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி தொடர்ந்து 9வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுக தொழிலாக செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதிகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் பல்வேறு ரகங்களில் காட்டன் சேலைகளும், வெள்ளை, கலர் வேட்டிகளும் மற்றும் கோயில் சீசன்களுக்கு கருப்பு, காவி வேட்டிகளும் உற்பத்தி செய்து வருகின்றனர். சக்கம்பட்டி பகுதியில் 40க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும், டி.சுப்புலாபுரம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

இவர்களுக்கு 2 வருடத்திற்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2021 ஜனவரி 1ம் தேதி முதல் 2022 டிசம்பர் 31ம் தேதி வரை போடப்பட்ட பழைய கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், இந்த வருடத்திற்கான புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட படாததால் கடந்த 2ம் தேதி முதல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து கடந்த 4ம் தேதி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விசைதறி உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மேலும் கடந்த 6ம் தேதி மாலை மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திண்டுக்கலில் நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், நேற்று 9வது நாளாக டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி அதனை சார்ந்த பாகு தயாரிப்பது நூல் கண்டு தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை சேர்ந்தவர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. இடையில் சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் 5வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்ப வருமானம் பற்றாக்குறையால் கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுளளது. இதனால் ரூ.2 கோடி மதிப்பிலான சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: