×

திருக்கோயில்களை பொறுத்தளவில் அங்கு பணிபுரிகின்ற பணியாளர்களின் நலனை காக்கின்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: திருக்கோயில்களில் பணிபுரியும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கி தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் சேகர்பாபு இன்று அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள்/ பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கடந்தாண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதிற்கிணங்க, முதலமைச்சர் திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் /ஓதுவார்கள்/ பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து, இந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களின் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கிடும் விதமாக, சென்னை மண்டலத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் இன்று வழங்கப்பட்டது. திருக்கோயில்களை பொறுத்தளவில் அங்கு பணிபுரிகின்ற பணியாளர்களின் நலனை காக்கின்ற அரசாக இந்த அரசு திகழ்கிறது. முதலமைச்சர் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி வழங்கியுள்ளதோடு கருணைத் தொகையாக ரூ. 3 ஆயிரம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்.

அதேபோல அர்ச்சகர்களின் ஓய்வூதியத்தை ரூபாய் 3000 ஆக உயர்த்தியும், கிராமப்புற பூசாரிகளுக்கான ஓய்வுதியத்தை ரூபாய் 4000 ஆக உயர்த்தியும் வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் சார்ந்த பணியாளர்கள் மனமகிழ்ச்சியோடு இருந்தால் தான் பணிகள் சிறப்பாகவும், வருகின்ற பக்தர்களை சிறந்த முறையில் உபசரிப்பதோடு, நிர்வாகமும் நல்ல முறையில் நடைபெறும் என்பதால் அவர்களின் நலன் காக்கின்ற அரசாக முதல்வர் தலைமையிலான அரசு திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்றைய தினம், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலிலும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும் உண்டியல் எண்ணுகின்ற பணி நடைபெறுகின்றது.

இப்பணிகள் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், எவ்வித குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வகையிலும், உண்டியல் எண்ணும் பணியினை வலைதளத்தில் நேரலையாக (Live Streaming) ஒளிபரப்பு செய்யும் வசதியினை தொடங்கி வைத்துள்ளோம். முதலமைச்சரின் அறிவுரையின்படி இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்கின்ற பல்வேறு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர்கள் முனைவர் ந.தனபால், கே.ரேணுகாதேவி, துணை ஆணையர்கள் ஜெ.முல்லை, ஆர்.ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Djagat Government ,Minister ,SeagarBabu , The DMK government is the government that protects the welfare of the employees working there in respect of the temples: Minister Shekharbabu interview
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...