×

ஜன.13 முதல் 16 வரை துணிவு, வாரிசு திரைப்படங்களின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை: கட் அவுட், பேனருக்கு பால் அபிஷேகம் செய்ய தடை..!!

சென்னை: ஜனவரி 13 முதல் 16 வரை துணிவு, வாரிசு திரைப்படங்களின் அதிகாலை 4 மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த 2 திரைப்படங்களும் நாளை வெளியிடப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது. தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை. திரையரங்குகளில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் பின்புறம், தொடர்புடைய புகார்களுக்கு அணுக வேண்டிய உயர்  அதிகாரியின் பெயர், பதவி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரியை அச்சிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட் அவுட், பேனருக்கு பால் அபிஷேகம் செய்ய தடை:

திரையரங்கு நுழைவாயில்களில் பெரிய பேனர் வைப்பது போன்ற செயல்களுக்கு அனுமதியில்லை. திரையரங்க வளாகங்களில் வைக்கப்படும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நெல்லையில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் கூடாது. பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபப்டும். அரசின் சட்ட திட்ட விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள விஜய், அஜித் ரசிகர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : From 13th to 16th Jan Thadvu, Varisu movie, early morning screening
× RELATED பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி...