×

குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூரிலிருந்து வரும் பஸ்கள் கொணவட்டம் வழியாக வந்து செல்ல வேண்டும்-குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை

வேலூர் : குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூரிலிருந்து வரும் பஸ்கள் கொணவட்டம் வழியாக வந்து செல்ல வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுகூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். இதில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

‘வேலூர் மாவட்டத்தில் தினமும் இரவு நேரங்களில் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் இயக்கப்படாமல் கல்லப்பாடி, கே.வி.குப்பம், டிடி.ேமாட்டூர், பீஞ்சமந்தை, வேலூர் டவுன், தொரப்பாடி, குடியாத்தம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை தடையின்றி இயக்கச்செய்யவேண்டும். வேலூர் மாவட்டத்தில் அவசர கால மருத்துவ நுட்புனர், பைலட்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்கின்றனர், அல்லது பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்தவேண்டும். தொழிலாளர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்களை நீண்டதூரம் பணியிட மாற்றம் செய்வது, வாய்மொழி உத்தரவாக பணி வழங்காமல் இருப்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கையை ஆம்புலன்ஸ் நிர்வாகம் எடுக்கிறது. எனவே ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் தொழிலாளர் சட்டவிரோத நடவடிக்கைகளை கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்’ இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

அண்ணா ரிக்‌ஷா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘வேலூர் மாநகரில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். அப்பகுதியில் ரிக்‌ஷா ஓட்டியும், மார்க்கெட்டில் கூலி வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அன்றாட வாழ்க்கை நடத்த சிரமப்படுகின்றனர். எனவே அனைவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்ைக எடுக்கவேண்டும்’ இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் முகமதுரபி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:‘குடியாத்தம், ஆம்பூர் ஆகிய ஊர்களில் இருந்து வேலூருக்கு வரும் பஸ்கள் பல ஆண்டுகளாக கொணவட்டம் வழியாக வந்து பழைய, புதிய பஸ் நிலையங்களுக்கு செல்லும். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பஸ்கள் கொணவட்டம் வழியாக வருவதில்லை. தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி இறக்கிவிடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆபத்தான முறையில் சாலையை கடந்து வருகின்றனர். எனவே மேற்கண்ட பஸ்கள் கொணவட்டம் பகுதிக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்’ இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

வேலூர் சாயிநாதபுரம் தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் நகரம் பல சிறப்புகளுடன் விளங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. தற்போது மாநகாரட்சியாகவும் உள்ளதால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. இயற்கை அமைப்பிலும் சிறந்த இடத்தில் அமைந்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பன்னாட்டு பசுமை விமான நிலையத்தை, வேலூரில் அமைத்தால் பொதுமக்கள் மிகுந்த பயன் அடைவர். அரசுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். தமிழக முதல்வருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

பளுதூக்கும் வீரர்கள் கலெக்டரிடம் வாழ்த்து

இந்திய பளு தூக்கும் விளையாட்டு சம்மேளனம் சார்பில் 2022-23ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான பளு தூக்கும்போட்டி நாகர்கோவிலில் கடந்த 27ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில் 900 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 77 கிலோ எடைபிரிவில் மாதவன் தங்கப்பதக்கம், 49 கிலோ எடைபிரிவில் கிஷோர் வெள்ளிப்பதக்கம், 102 கிலோ பிரிவில் விஷ்வா வெண்கலப்பதக்கமும் பெற்று வெற்றிபெற்றனர்.

அதேபோல் 81 கிலோ எடைப்பிரிவில் ஓவியா வெள்ளிப்பதக்கமும், 71 கிலோ எடைப்பிரிவில் லேக்மால்யா வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இவர்கள் கலெக்டர் குமாரவேல்பாண்டியனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், பயிற்சியாளர்கள் விநாயகமூர்த்தி, பிரதீப்குமார், கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தம்பதி திடீர் தர்ணா போராட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்த அலுவலகம் எதிரே திடீரென தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் அழைத்து சென்றனர். அப்போது, அதில் மனுவில் கூறியிருப்பதாவது: நான் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியை சேர்ந்த விஜியா. எனது தந்தை பூர்விக சொத்தை எனக்கும், அண்ணன், தங்கைக்கும் எழுதி வைத்தார்.

இருவருக்கும் அவர்களின் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய 69 சென்ட் நிலத்திற்கு மட்டும் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை. இதுகுறித்து ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை.  பலமுறை ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்றும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kudiattam ,Peranampatu ,Ampur ,Konavattam , Vellore: In the Vellore Collector's office, buses coming from Kudiattam, Peranampatu and Ampur should come and go through Konavattam.
× RELATED சிறுமியின் திருமணம் தடுத்து...