×

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகாரில் சிக்கியவர்களை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பான விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, விசாரணை முடிவடையும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல், இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படாதது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. பாமக நீண்ட நாட்களாக சுட்டிக்காட்டி வந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் உயர் கல்வித் துறை இது தொடர்பாக நேற்று பிறப்பித்திருக்கும் அரசாணையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதான 13 குற்றச்சாட்டுகளையும் பட்டியலிட்டு, அவற்றின் மீது உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உயர்கல்வித்துறை வட்டாரங்களில் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டவை தான்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல புகார்களை பாமக கடந்த காலங்களில் புள்ளி விவரங்களுடன் முன்வைத்திருக்கிறது. உண்மையில் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் எழுப்பப்பட்டுள்ளன. இவை குறித்தெல்லாம் பல மாதங்களுக்கு முன்பே விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மிகவும் தாமதமாகவே விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது; இப்போதாவது விசாரிக்கப்படவிருப்பது மனநிறைவளிக்கிறது.


Tags : Periyar University ,Ramadoss , Steps should be taken to remove those implicated in the Periyar University malpractice case: Ramadoss insists
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...