×

திருவாடானை பகுதியில் சாவியான நெற்கதிரை அறுவடை செய்யும் விவசாயிகள்

திருவாடானை : திருவாடானை பகுதியில் கால்நடைகளின் தீவனத்திற்காக சாவியாகி போன நெல் கதிரை இயந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என திருவாடானை தாலுகா அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு நெல் விவசாயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. திருவாடானை தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. சம்பா பட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் போது இந்த கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைத்து நெல் விவசாயத்திற்கு காலம் காலமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்து வந்த போதிலும் இப்பகுதி விவசாயிகள் அதிகளவு நெல் உற்பத்தியை செய்து விடுவார்கள். இதனால் தான் இந்த பகுதியை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கால போக்கில் இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் சரி வர தூர்வாராமல் மேடாகி வருகின்றது. மேலும் பருவ மழையும் அடிக்கடி தவறி விடுவதால் நெல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மாவட்ட அளவில் 3 லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் சம்பா பட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.

திருவாடானை தாலுகாவில் 65 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சரிவர பெய்ய வில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பல கண்மாய்கள் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் மங்கலகுடி, புல்லூர், தொண்டி, திருவாடானை ஆகிய 4 பிர்காவை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவ்வப்போது பெய்த சிறு மழையை கொண்டு விவசாயம் செய்து கதிர் வெளிவரும் சமயத்தில் மழை பெய்யாததால் அனைத்தும் சாவி ஆகிவிட்டது.

ஏக்கருக்கு பல ஆயிரம் விவசாயத்திற்காக செலவு செய்து விட்டு செய்வதறியாது விவசாயிகள் தவித்து வருகின்றனர். பல கிராமங்களில் நெல் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் கருகி விட்டது. இதனால் அவற்றை மாடுகளை விட்டு மேய விட்டு விட்டனர். இன்னும் சில கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வருமானம் தரக்கூடிய உப தொழிலான மாடுகளுக்கு தீவனம் வேண்டும் என்பதற்காக கருகிப்போன சாவியை இயந்திரம் மூலம் அறுவடை செய்து கிடைக்கும் வைகோலை சேகரித்து வருகின்றனர்.

கதிர் அறுவடை செய்யும் போது அதில் கிடைக்கும் நெல்லை விற்பனை செய்து இயந்திரத்திற்கு வாடகை கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்போது நெல் கதிர்கள் அனைத்தும் சாவி ஆகிவிட்டதால் கால்நடைகளின் தீவனத்திற்காக அறுவடை செய்யப்படுவதால் கடன் வாங்கி வாடகை இயந்திரங்களுக்கு வழங்கி வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தோம். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைவிட்டதால் நெல் விவசாயம் சாவியாகி விட்டது. ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்த பின் கதிர் வெளிவரும் சமயத்தில் மழை இல்லாமல் போய் விட்டதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயம் இதுபோன்று பாதிக்கப்படும் சமயத்தில் எங்களுக்கு கை கொடுப்பது பயிர்காப்பீடு திட்டம். மேலும் அரசு வழங்கும் நிவாரணம் ஆகியவற்றை வைத்து தான் அடுத்த ஆண்டு எங்களால் விவசாயம் செய்ய முடிந்தது. ஆனால் சென்ற ஆண்டு மழையால் விளைந்த நெல் அறுவடை செய்ய முடியாமல் முளைத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடன் வாங்கி விவசாயம் செய்து தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டாவது அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு இழப்பீடு கிடைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு எங்களால் விவசாய பணிகளை செய்ய முடியும் என்றனர்.

நெற்பயிரை காப்பாற்றும் உறைகிணறு

தொண்டி: ெதாண்டி பகுதியில் பருவ மழையை நம்பி நடப்பாண்டு 20 ஆயிரம் ஹெட்டேரில் விவசாய பணிகள் துவங்கியது. ஆரம்பத்தில் தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உழவார பணிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்யாததால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்தனர். ஆற்று நீரோ ஊற்று நீரோ இல்லாமல் மழை நீரை மட்டுமே நம்பி இப்பகுதி விவசாயம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் அறிவிக்கப்பட்டது. இதனால் மழை பெற வாய்ப்புண்டு என்று விவசாயிகள் நம்பினர். ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதே தவிர மழை பெய்ய வில்லை. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்சியை ஏற்படுத்தியது.

புயலால் கூட மழை பெய்ய வில்லையே எப்படி விவசாயத்தை தொடர்வது என விவசாயிகள் கவலை அடைந்தனர். சில நாள்களாக கடுமையான வெயில் அடித்ததால் பயிர்கள் கருகியது. இதையடுத்து முகிழ்த்தகம் பகுதி விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற வேறு வழி இல்லாமல் வயல்களின் அருகிலையே உறைகிணறு தோண்டி தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பிரபு கூறியது, பருவ மழை துவக்கத்தில் நன்றாக பெய்தது. அதை நம்பி செலவு செய்து பணிகளை பார்த்தோம். தற்போது போதிய மழை இல்லை. கண்மாயிலும் தண்ணீர் இல்லை. அடுத்தடுத்த நாள்களில் மழை பெய்யாததால் பயிர்களை காக்க முடியவில்லை. தற்போது கடைசி முயற்ச்சியாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உறைகளை கொண்டு செல்ல கூட வழி இல்லாமல் விவசாயிகள் கடுமையான கஷ்டப்பட்டு கொண்டு சென்று கிணறு தோண்டியுள்ளோம். சில வயல்களில் வேறு வழி இல்லாமல் ஆடு மாடுகளை மேயவிட்டோம் என்றார்.

Tags : Tiruvadana , Thiruvadanai : Farmers use the rice threshing machine which has become a key for cattle fodder in Thiruvadanai region.
× RELATED வழக்கறிஞர் மீது பொய் வழக்கு – டிஎஸ்பி ஆஜராக உத்தரவு