சேப்பாக்கத்தில் புதிய ரேஷன் கடை திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் ரூ.24.98 மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கினார். சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் 2021-22ம் ஆண்டிற்கான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24.98 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலைக் கடையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்யையும் அவர் வழங்கினார்.

இந்த சட்டமன்ற தொகுதியில் ஒட்டுமொத்தமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற தகுதியானவர்கள். இதில் புதிதாக திறக்கப்பட்ட நியாய விலைக்கடைகளான எண் 2 மற்றும் எண் 6 ஆகிய கடைகளில் உள்ள 1,947 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். நிகழ்ச்சியில் நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு,  துணை ஆணையர் (மத்திய வட்டாரம்) சிவகுரு பிரபாகரன், நுகர்வோர் பணிகள் கூடுதல் பதிவாளர் சங்கர், தேனாம்பேட்டை மண்டலக் குழு தலைவர் மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரி வெங்கடேசன், இணை பதிவாளர்கள் பாபு, தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: