சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தை விட்டு வெளியேறவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல.
ஒரு அமைச்சரவை தயாரித்த அறிக்கையை மறைத்தும், திரித்தும் அவர் வாசித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியின் உறுப்பினர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது அவை நாகரீகமின்றி சட்டப்பேரவையையும், அதன் மூலம் தமிழக மக்களையும் அவமதிக்கும் வகையில் அவை மரபை மீறி ஆளுநர் வெளியேறிச் சென்றது அவரது சகிப்பின்மையையும், நாகரீகமற்ற தன்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவியை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி ஜன.20 ம் தேதியன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
திருமாவளவன் (தலைவர் விசிக): அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமல் அவர் எப்படி தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டங்களில் பங்கேற்க முடியும். ஆளுநர் சமூகநீதி அரசியலுக்கான அடிமடியில் கை வைக்கிறார். இனி ஒரு நொடியும் அவர் எங்க நீடிப்பதற்கு தகுதி இல்லை அருகதையும் இல்லை. வருங்காலத்தில் ஆளுநர் இங்கு நீடிக்கும் வகையில் தமிழக அரசு சுதந்திரமாக எந்த முடிவையும் எடுக்க இயலாது ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது.
மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 13ம் தேதி மாலை 3 மணி அளவில் சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி ஒற்றுமை போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும். அதிமுகவின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தேய்மானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் மெல்ல மெல்ல மக்களின் நன்மதிப்பை இழந்து வருகிறார்கள். அதிமுக ஆர்எஸ்எஸ்-இன் பி டீம் போல செயல்படுகிறார்கள்.
