×

சிவகாசியில் போலீசார் பற்றாக்குறையால் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையங்கள்

*அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் | புதிய எஸ்பி அதிரடி காட்டுவாரா

சிவகாசி : சிவகாசி காவல் சரக உட்கோட்டத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க, கூடுதல் போலீஸ்காரர்களை நியமிக்க வேண்டும்.பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விருதுநகர் மாவட்ட புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள சீனிவாசப்பெருமாள், ஏற்கனவே சிவகாசி டிஎஸ்பியாக பணியாற்றியுள்ள நிலையில், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிவகாசி பகுதியில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்வதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை போக்க விருதுநகர் மாவட்ட புதிய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள சீனிவாசப் பெருமாள், சில ஆண்டுகளுக்கு முன்பு, சிவகாசியில் டிஎஸ்பியாக சிறப்பாக பணிபுரிந்ததால், அவரது வரவு சிவகாசி மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சிவகாசி டிஎஸ்பி பாபுபிரசாந்த் ஒரு மாதத்திற்கு மேலாக விடுமுறையில் உள்ளதால், விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்தூர் டிஎஸ்பிக்கள் கூடுதல் பொறுப்பாக சிவகாசியை கவனித்து வருகின்றனர். இவர்கள் தேவைப்படும்போது மட்டும், சிவகாசிக்கு வந்து செல்வதால், இங்கு நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் நகைபறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிவகாசி காவல் சரக உட்கோட்டத்தில் பெரும்பாலான காவல்நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது.
அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள்:

சிவகாசி காவல் சரகத்தில் செயின், வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வீட்டின் முன்பு கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி, மொச்சைக்காய் விற்பனை செய்ய வந்தவர் மூதாட்டியிடம் நகையை பறிக்க முயற்சி, டி.வி.,பழுது பார்ப்பதுபோல் வந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்த வாலிபர், மருந்துக்கடை பெண் உரிமையாளரிடம் 8 பவுன் நகையை திருடிய மோட்டார் சைக்கிள் திருடர்கள் என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றச்சம்பவங்கள் இனிவரும் காலத்தில் நடைபெறாமல் இருக்க, சிவகாசியில் போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்:சிவகாசி காவல் சரக உட்கோட்டத்தில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் கடந்த 2016ம் ஆண்டு சிவகாசி அருகே, கொங்கன்குளம் பகுதியில் ராஜூ என்ற பட்டாசு ஆலை மேலாளர் படுகொலை வழக்கிலும், கடந்த 2013ல் மாரனேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் தாய் படுகொலை வழக்கிலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கடந்த 2020 மே மாதம் 19ம் தேதி நள்ளிரவு சிவகாசி அருகே குமிழங்குளம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரகுபதியின் வீட்டில்,
மர்மநபர்கள் புகுந்து 80 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய புதிய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சிவகாசிக்கு தேவை புதிய கிரைம் டிஎஸ்பிசிவகாசி காவல் சரக உட்கோட்டத்தில் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், எம்.புதுப்பட்டி, மாரனேரி மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசன் ஆகிய போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன. சிவகாசி போலீஸ் உட்கோட்டத்தில் கடந்த ஆண்டு 8 கொலை வழக்குகள், 10 கொலை முயற்சி வழக்குகள், 12 வழிப்பறி வழக்குகள், 70 திருட்டு வழக்குகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டும் தொடக்கத்திலிருந்தே வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேசனில் மட்டுமே கிரைம் இன்ஸ்பெக்டர் பணியில் உள்ளார்.
குற்றம் அதிகம் நடைபெறும் சிவகாசி கிழக்கு, திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசன்களில் கிரைம் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. சிவகாசி பகுதியில் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் சிவகாசி உட்கோட்டத்திற்கு புதிய கிரைம் டிஎஸ்பி நியமிக்கப்பட வேண்டும். புதிய கிரைம் டிஎஸ்பி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயன்பாட்டிற்கு வரவேண்டும்

சிவகாசியில் முத்துராலிங்கபுரம் காலனி, விஸ்வநத்தம், சித்துராஜபுரம், பாரைப்பட்டி, ஹவுஸ்சிங் போர்டு, திருத்தங்கல், சித்துராஜபுரம் ஆகிய பகுதியில் புறக்காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்காகவும், சிறிய குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும், இந்த புறக்காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில், திருத்தங்கல், பாரைப்பட்டி, சித்துராஜபுரம் புறக்காவல்நிலையங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. மற்ற புறக்காவல்நிலையங்கள் பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கின்றன. பூட்டிக்கிடக்கும் புறக்காவல்நிலையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் புதிய டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Sivagasi , Sivakasi : Additional policemen should be appointed in Sivakasi police station to check the rising crime rate.
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...