×

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ 2வது கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 2வது கட்டமாக இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 12ம் வகுப்பு பயின்ற 91.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டு பொதுத்தேர்வின் தேர்ச்சியினை காட்டிலும் அதிகமாகும். பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் (95.15 சதவீதம்) தமிழகத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 94.56 விட அதிகமாகும். இத்துறையின் கீழ் செயல்படும் 26 ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணாக்கர்களும், 14 பழங்குடியினர் நலப் பள்ளி மாணாக்கர்களும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையை குறைக்கவும், ‘என் கல்லூரி கனவு’ என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 38 மாவட்டங்களைச் சேர்ந்த 13,800 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவிடும் பொருட்டு, இரண்டாம் கட்டமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (14ம் தேதி) முதல் வருகிற 21ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது.

அதன்படி சென்னை, நாகப்பட்டினம், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று (14ம் தேதி), தர்மபுரி, திண்டுக்கல், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர் (15ம் தேதி), ஈரோடு, அரியலூர், தென்காசி, திருப்பூர், தஞ்சாவூர் (16ம் தேதி), காஞ்சிபுரம், மதுரை, விழுப்புரம், நீலகிரி, சேலம் (17ம் தேதி), தூத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளுர், கோயம்புத்தூர், திருநெல்வேலி (18ம் தேதி), கரூர், திருப்பத்தூர், விருதுநகர், திருவாரூர், வேலூர், ராமநாதபுரம், தேனி (20ம் தேதி), ராணிப்பேட்டை, சிவகங்கை, நாமக்கல், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி (21ம் தேதி) நடைபெறுகிறது.

பள்ளி இறுதி ஆண்டில் தேந்தெடுத்த பாடங்களுக்கேற்ப உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்ப பதிவு செய்வதற்கான உயர்கல்வி நிறுவனங்களின் இணையதள முகவரி, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை, தேவையான சான்றிதழ்கள் குறித்து உரிய விளக்கப்படங்களுடன் பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது. வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பள்ளி இறுதியாண்டு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினை சார்ந்த அனைத்து மாணவ – மாணவிகளும் கலந்துகொள்ளலாம்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ 2வது கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : ADADIRAVIDAR ,Chennai ,Department of Adhiravidar and Tribal Welfare ,Adhiravidar ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்