×

மாநில, மாவட்ட அளவிலான குத்துச்சண்டை, சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

புழல்: புழல் ஊராட்சி ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நூற்றாண்டை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அழிஞ்சிவாக்கம், கோட்டூர், புதுநகர், தீர்த்தங்கரையம்பட்டு, பாலவாயல், விளாங்காடுப்பாக்கம், மல்லி மாநகர், தர்காஸ் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 950க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் நாராயணன் உள்பட 14 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்வியுடன், விளையாட்டு போட்டிகள், தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான சிலம்ப போட்டியில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தஞ்சாவூரில் பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் இந்த பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிவகலா பிரிவில் முதல் இடத்தையும், 7ம் வகுப்பு மாணவன் எம்.கிஷோர் அஷ்டகலா பிரிவில் முதல் இடத்தையும், 4ம் வகுப்பு மாணவன் எஸ்.யுவராஜ் 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிவ கலா பிரிவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர். இதேபோல், கடந்த டிசம்பர் மாதம் சென்ைன நேரு ஸ்டேடியத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் இந்த பள்ளியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி சாராதமிழ் முதல் இடத்தை பெற்று, மாநில அளவில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் நாராயணன் கூறுகையில், ‘‘எங்கள் பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 955 மாணவர்கள் பயில்கின்றனர்.

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வி மற்றும் ஒழுக்கத்தை அளிக்க அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மேலும் மாணவர்களின் தனித்திறமை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்கிறோம். குறிப்பாக மாணவர்களுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பள்ளி அளவில் பயிற்சி அளித்து ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பெறுகின்றனர். இந்த ஆண்டில் சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு பெற்று உள்ளனர். மேலும், மாணவர்களை கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற அவர்களின் திறமையை கண்டறிந்து பயிற்சி அளித்து வருகிறோம்.

இந்த கல்வி ஆண்டில் கலைத்திருவிழா போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்கள் பட்டிமன்றம், செவ்வியல் நடனம், தனி நபர் நடிப்பு, கட்டுரை எழுதுதல், கதை கூறுதல், கதை எழுதுதல் போன்ற பிரிவுகளில் கலந்துக்கொண்டு ஒன்றிய அளவில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
எங்கள் பள்ளியின் வளர்ச்சியில் எங்களுடன் இணைந்து அழிஞ்சிவாக்கம் ஊராட்சி தலைவர் ஆஷா கல்விநாதன், புழல் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், அழிஞ்சிவாக்கம் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர்கள் மற்றும் அழிஞ்சிவாக்கம் கிராம மக்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் இப்பள்ளி கல்வியிலும், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : Chilamba , State and district level Boxing and Chilamba competitions achieved by government school students
× RELATED மாநில சிலம்ப போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்