பாரம்பரிய உடையில் அசத்திய சாய் பல்லவி

கோவை: டி.வி நிகழ்ச்சியில் நடனமாடி பிரபலமான சாய் பல்லவி, பிறகு ஜார்ஜியா நாட்டில் இதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டத்தை பெற்றார். பிறகு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ்பெற்ற அவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கிறார். இந்நிலையில், பாரம்பரிய படுகர் இன உடையில் தோன்றி அசத்திய சாய் பல்லவி யின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்கள், தங்களுடைய மூதாதையரான ‘ஹெத்தையம்மனை’ குலதெய்வமாக வழிபட்டு  வருகின்றனர். பெண் தெய்வமான ஹெத்தையம்மனின் மூல ஸ்தலம், கோத்தகிரி  அருகிலுள்ள பேரகணியில் இருக்கிறது.

தற்போது ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் பணி புரியும் படுகர்கள் இ்ந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். படுகர் இன பெண்கள் பாரம்பரியமாக உடுத்தும் வெண்ணிற ஆடையில் தோன்றிய சாய் பல்லவி, பாரம்பரிய அணிகலன்களான வெள்ளி நகைகள் அணிந்து, ஹெத்தையம்மன் கெட்டப்பில் தனது உறவினர்களுடன் திருவிழாவில் பங்கேற்றார். அவரைப் பார்த்த உள்ளூரிலுள்ள மக்களும், ரசிகர்களும் வியந்து அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: