×

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும்: மமக தலைவர் ஜவாஹிருல்லா உறுதி

தாம்பரம்: தமிழகத்தில் இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என நேற்று தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார். சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் பிப்ரவரி 19ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகத்தினருக்கும் எதிரானது என்பதுதான் உண்மை. பொது சிவில் சட்டத்தினால் நாட்டில் குழப்பம் ஏற்படும், கேடு விளைவிக்கும் என்ற மையக்கருத்தை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் திமுக தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமையும். இக்கட்சிகள் அனைத்தும் இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். அனைவருக்குமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் ஒரே கோட்டில் நிற்கின்றனர்.

இன்றைக்கு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை பாதயாத்திரையை கண்டு ஆளும் பாஜ அஞ்சுகிறது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெறும். இதன்மூலம் இந்தியாவின் புதிய அத்தியாயம் பிறக்கப் போகிறது என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார்.இப்பேட்டியின்போது மாநில துணை பொது செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப், மமக நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சலீம்கான், ஆஷிக் உள்பட பலர் உடனிருந்தனர்.



Tags : 2024 parliamentary elections ,dazhagam ,mamaka ,jawahirlah , Parliamentary elections, strong alliance led by DMK, Mamata Banerjee Chief Jawahirullah confirmed
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...