×

வரும் 26ம் தேதி மைசூருவில் நடக்கிறது நடிகருடன் ஹரிப்பிரியா காதல் திருமணம்

பெங்களூரு: கன்னட முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹரிப்பிரியாவுக்கும், பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள கன்னட நடிகரும், பின்னணி பாடகருமான வசிஷ்டா சிம்ஹாவுக்கும் வரும் 26ம் தேதி மைசூருவில் திருமணம் நடக்கிறது. கடந்த 2007ல் துளு மொழி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், ஹரிப்பிரியா. இதையடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்தார். தமிழில் கரணுடன் ‘கனகவேல் காக்க’, அர்ஜூனுடன் ‘வல்லக்கோட்டை’, சேரன் மற்றும் பிரசன்னாவுடன் ‘முரண்’, சசிகுமாருடன் ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் இங்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாததால், தொடர்ந்து கன்னடப் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில், கன்னட நடிகரும், பின்னணி பாடகருமான வசிஷ்டா சிம்ஹாவுடன் ஹரிப்பிரியா டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சிங்கம் கையில் ஒரு பெண் குழந்தை இருப்பது போன்ற ஒரு பதிவை வெளியிட்டு, ‘அன்பே, நான் உன் கையில் இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

அதற்கு வசிஷ்டா சிம்ஹா பதிலளிக்கையில், ‘நான் எப்போதும் உன் நிழலாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டு, தங்கள் காதலை உறுதி செய்தார். இதையடுத்து இருவீட்டு பெற்றோர் சம்மத்துடன் ஹரிப்பிரியா, வசிஷ்டா சிம்ஹா திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவில் நடந்தது. எளிய முறையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இருவீட்டு உறவினர்கள் கலந்துகொண்டனர். பிறகு ஹரிப்பிரியா, வசிஷ்டா சிம்ஹா நிச்சயதார்த்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அவர்களது காதல் திருமணம் வரும் 26ம் தேதி மைசூரு ஸ்ரீகணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் எளிய முறையில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் ஹரிப்பிரியா தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Haripriya ,Mysuru , Haripriya's love marriage with the actor will take place in Mysuru on 26th
× RELATED கர்நாடகாவில் இன்று 7 மாவட்டங்களில்...