ராஜ்கோட்: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள்கொண்ட டி.20 தொடரில் முதல்போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இலங்கையும் வெற்றிபெற்றன. இதனால் 1-1 என சமனில் இருக்க 3வது மற்றும்கடைசி டி.20 போட்டிகள் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இதில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்குகின்றன. புனேவில் நடந்த 2வது போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. குறிப்பாக 7 நோபால்களை வீசியது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பந்துவீச்சை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங்கில் ஓபனிங் சிறப்பாக அமையவில்லை.
மிடில் ஆர்டரும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. புத்தாண்டில் முதல் தொடரை சொந்த மண்ணில் இழந்துவிடக்கூடாது என்ற நெருக்கடி கேப்டன் ஹர்திக்பாண்டியாவுக்கு உள்ளது. இன்றயை போட்டியில் பவுலிங்கில் சில மாற்றங்கள் இருக்கலாம். அர்ஷ்தீப்சிங்கிற்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது ஹர்சல்பட்டேல் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. மறுபுறம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தொடரை கைப்பற்றும் உற்சாகத்தில் உள்ளது. குசால்மென்டிஸ் ஓபனிங்கில் அதிரடியாக மிரட்டி வருகிறார். பந்துவீச்சும் இந்தியாவைவிட அருமையாக உள்ளது. இதனால் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது. குறிப்பாக தசுன் ஷனகா இந்தியாவுக்கு எதிரான கடைசி 5 டி.20 போட்டிகளில் 56* (22பந்து), 45 (27), 33* (18), 74* (38) மற்றும் 47* (19பந்து) ரன் விளாசி உள்ளார்.
மேலும் டி.20 போட்டியில் பவுலிங்கில் அவர் மொத்தமாக எடுத்துள்ள 23 விக்கெட்டில் 14 இந்தியாவுக்கு எதிராக எடுத்தது தான். இதனால் அவரை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 டி.20 கிரிக்கெட் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொள்ள இந்தியா போராடும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இரவு 7மணிக்கு தொடங்கும்இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது. டி.20 போட்டியில் இந்தியா-இலங்கை இன்று 29வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. இதற்கு முன் ஆடிய 28போட்டியில் 18ல் இந்தியாவும், 9ல் இலங்கையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது.
டிராவிட் பாராட்டு:
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட் அளித்துள்ள பேட்டியில், இலங்கை இந்த தொடரில் ஒரு அழகான அனுபவம் வாய்ந்த டி20 ஐ அணியைப் பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் இருந்து, அவர்கள் விளையாடும் லெவனில அதிக மாற்றங்களைச் செய்யவில்லை. அவர்களிடம் சில கிளாஸ் வீரர்கள் உள்ளனர். மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள், ஆட்டத்தின் பின்பகுதியில் பவர்-ஹிட்டர்களைப் பெற்றுள்ளனர். தசுன் ஷனகா நன்றாக விளையாடுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு சில கடினமான காலங்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களை எந்த நிலையிலும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது, என்றார்.
