×

ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போன பாதை மயானத்திற்கு செல்ல சாலை வசதி வேண்டும்-வரவணி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா?

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் உள்ளது வரவணி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி பரிதவித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் இறந்தால் உடலை அடக்கம் செய்வதற்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக சுமார் 1 கி.மீ தூரத்தில் மயானம் உள்ளது.

இந்த மையானத்திற்கு செல்வதற்கு அரசால் ஒதுக்கப்பட்டிருந்த பாதையை பலரும் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனால் சுமார் 20 அடி அகலம் உள்ள பாதை சில இடங்களில் 5 அடி அகலம் கூட இல்லாமல் குறுகிவிட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.பல நேரங்களில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் பொழுது பிரச்சனைகள் ஏற்பட்டு போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் உதவியை நாடவேண்டிய நிலை உள்ளது. இதனை சரி செய்து தர வேண்டும் என மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முதியவர் பிச்சை கூறுகையில், ‘‘எனக்கு 80 வயது ஆகிவிட்டது. கடந்த சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இடம் கையகப்படுத்தி எங்களை போன்றவர்களுக்கு அரசு சார்பாக இலவசமாக காலனி வீடுகளை கட்டி கொடுத்தார்கள். அதன் பிறகு சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டும், பராமரிப்பு செய்தும் வீடுகள் கட்டியும் குடியிருந்து வருகிறோம்.

எங்கள் குடியிருப்பில் மழை காலங்களில் ஏதாவது ஒருவர் இறக்க நேர்ந்தால் அவர்களை தூக்கி சென்று அடக்கம் செய்வதில் அன்று முதல் இன்று வரை மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் விதமாக மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியின் மத்தியில் உள்ள காலி இடத்தில் ஒரு சமுதாய கூடம் ஒன்று கட்டி தர வேண்டும். கூடுதல் குடிநீர் குழாய் உள்ளிட்ட எங்களுக்கு தேவையை அடிப்படை வசதிகளை செய்து தந்து எங்களின் வாழ்வில் ஒளி ஏற்றி தந்து உதவிட வேண்டும்’’ என்றார்.

குடும்ப தலைவி பஞ்சவர்ணம் கூறுகையில், ‘‘எனது கணவர் செபஸ்தி சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய தூக்கி செல்ல வழியில்லாமல் சிலர் தடுத்துவிட்டனர். குடும்பமே சோகத்தில் மூழ்கி இருந்த நிலையில் அவரது உடலை தூக்கி சென்று அடக்கம் செய்வதற்கு பாதை இல்லாமல் வழியிலேயே வைத்து கொண்டு போலீசார் உதவியுடன் அடக்கம் செய்து வந்தோம்.

அந்த பாதை பிரச்சனை சிலரது ஆக்கிரமிப்புகளாலும் ரோடு வசதி இல்லாததாலும் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. வருங்கால சந்ததியினராவது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்கும் விதமாக அரசு சார்பாக நிரந்தர தீர்வு கிடைக்கும் விதமாக மயானத்திற்கு செல்வதற்கு ரோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார்.

சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும்

வார்டு உறுப்பினர் சுந்தராசு கூறுகையில், ‘‘நான் வரவணி ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக உள்ளேன். எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான மயானத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதுடன் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். எங்கள் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பொதுமக்களின் இல்லங்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக இங்குள்ள காலி இடத்தில் ஒரு சமுதாய கூடம் கட்டி தர வேண்டும்.

இது குறித்து ஊராட்சி மன்ற கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளேன். மேலும் தமிழக முதல்வர், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எனது சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். தமிழக முதல்வர் மற்றும் ராமநாதபுரம் கலெக்டர் ஆகியோர் எங்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்’’ என்றார்.

Tags : Varavani , RS Mangalam: Villagers have been demanding for a long time that a road should be constructed near RS Mangalam to go to the graveyard.
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பருத்தி செடிகளில் நோய் தாக்குதல்