×

தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்

சென்னை: இந்திய அளவில் தொழில் துவங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நேற்று நடந்த உலக தமிழ் வம்சவாளி 9வது மாநாட்டில்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், பெரும் தொழிற்சாலைகளுக்கு  துணையாக இருந்து நாட்டின் சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கும், ஏற்றுமதிக்கும் பெரும் துணை புரிந்து வருகிறது. மேலும், நமது நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறையாக எம்எஸ்எம்இ (MSME) துறை விளங்குகிறது.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு துவண்டு இருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை தன் சீரிய திட்டங்களால் தூக்கி நிறுத்திய பெருமை முதல்வரையே சாரும். இந்திய அளவில் தொழில் துவங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இன்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தர வரிசை பட்டியலில் 5வது நிலையில் இருந்து தமிழகம் இன்று 3ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில், 7 லட்சத்து 7,681 பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன.

இதன்மூலம், 64 லட்சத்து 48 ஆரியம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் 8,000 வகையான பொருட்களை உற்பத்தி செய்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் இந்திய அளவில் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது. தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெற கடந்த ஆண்டு சிங்கிள் விண்டோ போர்டல் 2.ஏ திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 40 அரசு துறைகள் வழங்கும் 142 வகையான சேவைகளை இணைய வழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மூலமாக 14,651 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 12,900 தொழில்முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மலேசிய நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, இலங்கை முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், ராதாகிருஷ்ணன், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்.வி.கேசவன், வடஅமெரிக்க தமிழ் சங்க தலைவர் ஜானகிராமன், விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன், உலக தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Minister ,Th.Mo.Anparasan Perumitham , Tamil Nadu, which was ranked 14th in the list of the best states to start a business, has moved up to the 3rd position: Minister Th.Mo.Anparasan Perumitham
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...