×

பொங்கலையொட்டி ஏற்பாடு மாலகோயில் திருவிழாவுக்காக கால்நடை உருவார பொம்மை தயாரிப்பு தீவிரம்-லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் அதிசயம்

உடுமலை : பொங்கலையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மாலகோயில் திருவிழாவுக்காக உடுமலை பகுதியில் கால்நடைகளின் உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும் சுற்றுவட்டார கிராமங்களில், பாரம்பரிய கலைகளை பயிற்சி செய்து தயாராகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோயில் உள்ளது.

இங்கு, கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கவும், உருவாரங்களை வைத்து வழிபடுவது பாரம்பரியமாக தொடர்கிறது. குறிப்பாக, பொங்கலையொட்டி, 3  நாட்கள் நடக்கும் திருவிழாவில், ஆல்கொண்ட மாலனுக்கு, பாலாபிஷகம் செய்து, உருவாரம் வைத்து வழிபட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.  மார்கழி மாதம் துவங்கியதுமே, தைப்பொங்கலை வரவேற்கவும், ஆல்கொண்டமால் கோயில் திருவிழாவை கொண்டாடவும், உடுமலை பகுதி கிராம மக்கள் தயாராகி விடுவர்.

அவ்வகையில், புக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. முன்பு, இத்தொழிலில் அதிகளவு குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு காரணங்களால், மண்பாண்டம் மற்றும் உருவார பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் குடும்பத்தினர் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது சில குடும்பத்தினரே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து உருவார பொம்மை தயாரிப்பு தொழிலாளர்கள் கூறுகையில், கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாட கிராம மக்கள் தயாராகி வருகின்றனர். அதற்கேற்ப உருவார பொம்மைகளையும் அதிகளவு ஆர்வத்துடன் தயாரித்து வருகிறோம். குளத்து மண்ணில், மணல், சாணம் உள்ளிட்டவை கலந்து பொம்மைகள் செய்வதற்கான மண் தயார் செய்கிறோம்.

தேவையான உருவங்களை ஈர மண்ணில் கொண்டு வந்ததும், சூளையில் இட்டு வேக வைக்கிறோம். தொடர்ந்து, சுண்ணாம்பு மற்றும் பல வர்ணங்கள் தீட்டி விற்பனை செய்கிறோம். உருவங்களை பொறுத்து, 50 ரூபாய் முதல் நுாறு ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். போதிய லாபம் கிடைக்காவிட்டாலும், பாரம்பரிய தொழிலை கைவிடாமல் தொடர்கிறோம்’’ என தெரிவித்தனர்.

தேவராட்டம்

மார்கழி மாதம் துவங்கியதும், தைப்பொங்கலை வரவேற்க உடுமலை பகுதி கிராம மக்கள் களத்தில் இறங்கி விடுவது வழக்கம். அவ்வகையில், பனி பொழியும் இரவுகளில், பொது இடங்களில் பாரம்பரிய கலைகளை ஆடி மகிழ்கின்றனர். குறிப்பாக, தேவராட்டம், கும்மியாட்டம், சலகெருது மறித்தல் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை ஆடுகின்றனர். மேலும், இக்கலைகளை இளைய தலைமுறையினரும் கற்றுக்கொள்ளும் வகையில், பயிற்சி கொடுக்கின்றனர். இவ்வாறு, அனைத்து கிராமங்களும், பாரம்பரிய கலைகளால் களைகட்டி வருகிறது. இந்த கலைகளை பொங்கலையொட்டி நடக்கும் திருவிழாவில் நடத்துவதை கலைஞர்கள் பெரிதும் கவுரவமாகவே கருதுகின்றனர்.



Tags : Malakoil festival ,Pongal , Udumalai: During Pongal, lakhs of devotees gather for the Malakoil festival in Udumalai.
× RELATED கரும்பு நடவில் விவசாயிகள் ஆர்வம்