×

561 வீடுகளில் விரிசல் உத்தரகாண்டில் புதையும் நகரம்: பொதுமக்கள் அச்சம்; காலி செய்து வெளியேற்றம்

கோபேஷ்வர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மண்ணில் புதையும் வீடுகளால் பீதி அடைந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது ஜோஷிமத் நகரம். இந்த இடம் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக உள்ளது. மேலும் பத்ரிநாத் பகுதியில் இருந்து ஹெலாங், மார்வாடி ஆகிய பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தபோவன்- விஷ்ணுகாட் நீர் மின் திட்டம் ஒன்றிய அரசின் என்டிபிசி சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் கடலில இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் அதை சுற்றி உள்ள முக்கிய கிராமங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, பல வீடுகள் மண்ணில் புதைந்து வருகிறது. ஜோஷிமத்தில்   561 வீடுகளில் விரிசல்  ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு புகார்கள் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் பொதுமக்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை இடிந்த வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும் நீர் மின் திட்டத்தை நிறுத்த வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் வழங்கவும் போராட்டம் நடத்தப்பட்டது. வீடுகள் மண்ணில் புதையும் பகுதிகளை மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி என்.கே.ஜோஷி பார்வையிட்டார். மிகவும் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார். மேலும் ஜோஷிமத்தில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை மதிப்பீடு செய்ய தாமே அந்த இடத்திற்குச் செல்ல இருப்பதாகவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.


Tags : Uttarakhand , Cracks in 561 houses, Burying city in Uttarakhand, public fear,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...