×

சென்னை - பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை அடுத்த ஆண்டு திறப்பு: ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்திய ஒன்றிய அமைச்சர் கட்கரி தகவல்

பெங்களூரு: பெங்களூரு-சென்னை இடையில் அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ்வே சாலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திறக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக ஒன்றிய  தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி பெங்களூரு வந்தார். முதல் கட்டமாக பெங்களூரு-சென்னை இடையில் அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணியை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார். அதன்பின் இந்த சாலை அமைப்பு பணியை மேற்கொண்டு வரும் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘பெங்களூருவில் இருந்து சென்னை வரை 262 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை பணி ரூ.16,730 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு ஊரக மாவட்டம், ஒசகோட்டையில் தொடங்கி மாலூர், தங்கவயல், பேத்தமங்கலம் வழியாக கர்நாடகம், ஆந்திரா மற்றும் தமிழகத்தை இணைக்கும் தொழில் எக்ஸ்பிரஸ் காரிடார் சாலையாக இது அமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டிருந்தும் சில தொழில்நுட்ப காரணங்களால் செயல்படுத்தாமல் இருந்த நிலையில் நான் பொறுப்பேற்ற பின் செயல்படுத்த முடிவு செய்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலையமைக்கும் பணி முழுமையாக முடிந்தால், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் இடையில் அதிகமான தொழிற்சாலைகள் உருவாகும். அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பெங்களூரு-சென்னை இடையில் அமைக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை 8 வழி சாலையாக அமைகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல், தொழில் வளர்ச்சிக்கும் பக்க பலமாக இருக்கும். இந்த சாலையில் மணிக்கு 120 கி.மீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்க முடியும். பெங்களூரு-சென்னை இடையில் 3.15 நிமிடத்தில் சென்றடையும் வகையில் சாலையின் தரம் அமைகிறது.    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு சாலை திறக்கப்படும்.

பொதுவாக தேசிய நெடுஞ்சாலை பணிகளை தொழில் காரிடார்களாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த சாலைகளில் இரு புறமும் தொழிற்சாலைகள் அல்லது தொழில்பேட்டைகள் உருவாக்கப்படும். சாட்டிலைட் டவுன்ஷிப்புகள் உருவாக்கப்படும். அதன் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்படும். சென்னை துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள், அங்கிருந்து பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சரக்குகள் கொண்டு செல்ல இந்த சாலை பயனுள்ளதாக அமையும்’ என்றார்.

Tags : Chennai-Bengaluru Expressway ,Union Minister ,Gadkari , Union Minister Gadkari, Chennai-Bengaluru Expressway
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...