×

மக்களிடம் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. ஒழுங்காக அரசுக்கு செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவே சோதனை கொள்முதல் முறை: வணிகவரித்துறை அறிக்கை

சென்னை: மக்களிடம் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. ஒழுங்காக அரசுக்கு செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கே சோதனை கொள்முதல் முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வணிகவரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வணிகவரித்துறையில் சரக்கினைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.40 லட்சமும் சேவையைப் பொறுத்தவரை ரூ.20 லட்சமும் வணிகம் செய்பவர்கள் சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். பொருட்களுக்கும் சேவைகளுக்கும் வெவ்வேறு விகிதங்களில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை மாதந்தோறும் வணிகர்கள் தவறாது அரசுக்கு செலுத்த வேண்டும்.

மக்கள் வாங்கும் பொருட்களுக்கும் பெறப்படும் சேவைகளுக்கும் பில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வணிகவரித்துறையில் சோதனை கொள்முதல் முறையானது கடைபிடிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்டப்பிரிவு 67 (12)-இன் படி சோதனை கொள்முதல் செய்யவும், பிரிவு 122-இன் படி அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வணிகவரித்துறை அலுவலர்கள் சோதனை கொள்முதல் முறையை செயல்படுத்தி வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 3,148 சோதனை கொள்முதல் செய்யப்பட்டு, அதன்படி 1.840 இடங்களில் விற்பனை பட்டியல் வழங்காதது கண்டுபிடிக்கப்பட்டது.

வணிகர்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பில் வழங்காமல் இருப்பது அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதற்கு வழி வகை செய்கிறது. இந்த சோதனை கொள்முதல் நடைமுறை ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத வணிகர்களின் வணிகத் தளங்களில் நடத்தப்படுவதில்லை. பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கும், பெறும் சேவைகளுக்கும் உரிய வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித்துறையால் நடப்பு ஆண்டில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுமக்களே ஜி.எஸ்.டி. வரி கட்டுவதற்கு முன்வந்தாலும், ஒரு சில வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கும், வழங்கும் சேவைகளுக்கும் விலைப்பட்டியல் தராத நிலை தொடர்கிறது. எனவே விலைப்பட்டியல் வழங்கப்படுவதை கண்காணிப்பதற்காக இந்த சோதனை கொள்முதல் ஜி.எஸ்.டி. சட்டத்தின்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நடைமுறையால் நேர்மையாக வணிகம் செய்யும் வணிகர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tags : G. ,S.S. , GST collected from people Test purchase system to monitor proper payments to government: Commercial Tax Department report
× RELATED முட்டை மிட்டாய்