×

புனேவில் இன்று 2வது டி.20 போட்டி: 13 போட்டிக்கு பின் ஆடும் லெவனில் களம் இறங்கும் ராகுல் திரிபாதி

புனே: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது டி.20 போட்டி புனேவில் இன்று நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஹர்திக்பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி களம் இறங்குகிறது. முதல் போட்டியில் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பிய நிலையில் 6வது விக்கெட்டிற்கு தீபக் ஹூடா, அக்சர் பட்டேல் சிறப்பாக ஆடி அணியை காப்பாற்றினர்.

இதனிடையே சஞ்சு சாம்சன் காயம் காரணமாக டி.20 தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ராகுல் திரிபாதி களம் இறங்குவார் என தெரிகிறது. ராகுல்திரிபாதி, அயர்லாந்து (2), ஜிம்பாப்வே(3), தென்ஆப்ரிக்கா(3), வங்கதேசம்(3) உள்ளிட்ட நாடுகளுக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பெற்றிருந்த போதிலும் 13 போட்டியிலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இன்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாக முதல் போட்டியில் ஆடாத அர்ஷ்தீப் சிங் இன்று, ஹர்சல்பட்டேல் அல்லது உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக களம் இறங்குகிறார். இதேபோல் சாஹலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். மறுபுறம் இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றியின் விளிம்பு வரை வந்து கடைசி நேரத்தில் கோட்டைவிட்டது. இன்று தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆடும். இலங்கை அணியில் பெரிய மாற்றம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

* சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜிதேஷ் சர்மா
மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய வீரர் சஞ்சுசாம்சன் பீல்டிங் செய்தபோது கால் முட்டி மைதானத்தில் மோதி காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டி.20 தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக விதர்பா அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பரும், வலது கை பேட்ஸ்மேனுமான 29 வயது ஜிதேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு, யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடியாக ரன் சேர்த்தார். கடந்த ஐபிஎல்லில் 10
போட்டியில் பேட்டிங் செய்து. 2 நாட்அவுட் ஆக இருந்து மொத்தம் 234 ரன்களை, 29.25 சராசரியில், 163.64 ஸ்ட்ரைக் ரைட்டில் அடித்திருந்தார். அணியில் இணைந்தாலும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

* புதிய சாதனைக்கு வாய்ப்பு
டி.20 கிரிக்கெட்டில் இந்தியா இலங்கைக்கு எதிராக 18, இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக 18, பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிராக 18 போட்டிகளில் வென்றுள்ளன. இன்று இந்தியா வெல்லும் பட்சத்தில் டி.20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி பெற்ற (19வெற்றி) அணி என்ற சாதனையை படைக்கும்.

இந்தியா-இலங்கை இதுவரை 27 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 18, இலங்கை 8ல் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. பாண்டியா தலைமையில் இந்தியா இதுவரை 6 டி.20 போட்டிகளில் விளையாடி 5ல் வென்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. தோல்வியே சந்திக்காத பாண்டியா இன்று அதனை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

* புனே மைதானம் எப்படி? புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட்
அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இதுவரை 3 சர்வதேச டி.20 போட்டி நடந்துள்ளது. இதில் 2012ல் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2020ல் இலங்கைக்கு எதிராக 78 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்றுள்ளது. 2016ல் இலங்கைக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக 201/6 ரன் குவித்தது தான் அதிகபட்சமாகும். இதே இலங்கைக்கு எதிராக 2016ல் 101 ரன்னில் சுருண்டது தான் குறைந்தபட்ச ரன்னாகும். ஐபிஎல்லுடன் சேர்ந்து இங்கு ஒட்டுமொத்தமாக நடந்துள்ள 34 டி.20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 29ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Pune ,Rahul Tripathi ,XI , 2nd T20I in Pune today: Rahul Tripathi to field in playing XI after 13 matches
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...