8 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி ரூ.15,610 கோடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: தமிழகத்தில் 8 புதிய தொழில் திட்டங்களுக்கு ரூ.15,610 கோடி முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தொழில்துறையில் புதிதாக இடம்பெற்று இருக்கக்கூடிய முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்பின்னர், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிருபர்களிடம் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது:  தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழில்துறையில் புதிதாக பெறப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் ரூ.15,610 கோடி அளவிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கும், இதன்மூலம் 8,776 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்படி, இந்த தொழில் முதலீடுகள் பல்வேறு துறைகளிலே பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக, மின்னணு வாகன உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் டெக்னாலஜி, டெக்ஸ்டைல்ஸ், ஆக்ஸிஜன் தொழிற்சாலைகள் மையங்கள் போன்ற துறைகளிலிருந்து இந்த முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. அதேபோல், நடைமுறையில் உள்ள மின்னணு வாகன கொள்கையில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் மின்னணு வாகனங்களுக்கான சாலை வரி கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் 8 புதிய திட்டங்களுக்கு ரூ.15,610 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த முதலீடுகள் வருகிறது. தென் தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையான முதலீடுகள் வந்துள்ளன. இதுமட்டுமின்றி பரந்தூர் விமான நிலையத்தையொட்டி ஏற்கனவே பல தொழிற்பூங்காக்கள் உள்ளது. இதில் சில முதலீடுகள் அங்கே வருவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக கூறியிருந்தோம் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தொழில்துறை ஆய்வுகளை நடத்தியுள்ளது. அதன்படி கடந்த 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை 87% க்கும் மேலாக தமிழகத்தை சேர்ந்த கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை உள்ளனர். அதற்கான ழுமு ஆய்வினை தொழில்துறை மேற்கொண்டு தற்போது ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை பொறுத்து பார்க்கையில் தொழில்துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: