×

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா எம்எல்ஏ மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

ஈரோடு: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா. இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார்.

கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியானதை தொடர்ந்து, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தனது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி சென்றார். வீட்டில் இருந்த திருமகன் ஈவெராவுக்கு நேற்று மதியம் 12.30 மணியளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கதறி அழுதனர். கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

 திருமகன் ஈவேரா மரணத்தின்போது, அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் சென்னையில் இருந்தார். மகன் இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் அவர், உடனடியாக ஈரோடு விரைந்தார். தனது மகன் உடலை கட்டியணைத்து கதறி அழுதார். இந்த துயர செய்தி பற்றி தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அத்துடன், நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்தடைந்தார். அங்கு, திருமகன் ஈவெராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதேபோல், அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி, உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி, எம்பிக்கள் கனிமொழி, கணேசமூர்த்தி, எம்எல்ஏக்கள் செங்கோட்டையன், சரஸ்வதி, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். திருமகன் ஈவெராவின் உடல் இன்று மதியம் ஈரோடு ஆத்மா மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்படுகிறது. திருமகன் ஈவெரா இறந்த தகவல், காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமல்லாது, பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ்  கட்சியின்  முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் ஈவிகேஎஸ்.இளங்கோவனை தொடர்புகொண்டு ஆறுதல் கூறினர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* பெரியாரின் கொள்ளுப்பேரன்  
எம்எல்ஏ திருமகன் ஈவெரா, தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரன் ஆவார். பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி, சமனா ஈவெரா என்ற மகள் உள்ளனர். திருமகன் ஈவெரா கடந்த 2000-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். 2006-2010ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளராகவும், 2014-2017 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவு தலைவராகவும் இருந்தார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் ஈ.வெ.கி. சம்பத், தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஈ.வெ.ரா. திருமகன் 2021ம் ஆண்டுதான் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராக திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா. திருமகன்.

ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்ற போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள அண்ணன் இளங்கோவனை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன். ஈ.வெ.ரா. திருமகன் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : EVKS ,Elangovan ,Tirumagan Evera ,MLA ,Chief Minister ,M.K.Stalin ,Sonia ,Rahul condole , EVKS Elangovan's son Tirumagan Evera MLA death: Chief Minister M.K.Stalin pays tribute in person; Leaders including Sonia, Rahul condole
× RELATED மோடியை போலவே அண்ணாமலை ஒரு சர்வாதிகாரி...