×

மோடியை போலவே அண்ணாமலை ஒரு சர்வாதிகாரி : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் மூத்த தலைவர்

1 அதிமுக துண்டு துண்டாக சிதறும் என கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணம் என்றைக்கும் ஈடேறாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதற்கு உங்கள் கருத்து என்ன?
பதில்: அதிமுக ஏற்கனவே சிதறிவிட்டது என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். பன்னீர் செல்வம் ஒருபுறம், சசிகலா ஒருபுறம், டிடிவி ஒருபுறம் என சிதறி கிடக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் இந்த கட்சியும் சிதறிவிடும் என்றுதான் முதல்வர் கூறி இருக்கிறார். அது நடந்து வரலாற்றில் பதியப்போவது உண்மை. இதனை மறுக்க முடியாது.

2 தேர்தல் அறிவித்தது முதல் பாஜவினர் தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலையின் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?
தேர்தல் விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். ஆனால், பாஜ அதனை மதிக்காமல் எப்போதுமே எல்லை மீறி வருகிறது. அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் தமிழ்நாட்டில் மோடியை போல, ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். காலை எழுந்தது முதல் இரவில் தூங்கும் வரை சர்வாதிகாரியாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அவர் பேசும்போது கூட மற்ற தலைவர்களை மதிப்பதில்லை. மிரட்டித்தான் பேசுகிறார். இந்த தேர்தல் முடிவு வந்த பின்னர் அண்ணாமலை இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். இது உறுதி.

3 கச்சத்தீவு பிரச்னையில் மீனவர்களுக்கு காங்கிரஸ், திமுக அநீதி இழைத்துள்ளதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டி உள்ளாரே?
கிடைத்த இரண்டு மூன்று சீட்டுகளுக்காக, தன்னுடைய நன்றிக்கடனை ஜி.கே.வாசன் செலுத்திக்கொண்டிருக்கிறார். அவரை பொறுத்தவரை டெபாசிட் கூட வாங்கப்போவதில்லை. வாதத்திற்காக இந்த கச்சத்தீவு குற்றச்சாட்டை நாம் ஒத்துக்கொள்வோம் என்று வைத்துக்கொள்வோம், ஆனால், இந்த பத்து ஆண்டு காலமாக உங்கள் தலைவர் மோடி எங்கு சென்றார். ஏன் இத்தனை வருடமாக கச்சத்தீவை மீட்க மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவருடைய தலைவரை சென்று அவர் கேட்க வேண்டும். வாசனுக்கு அதற்கு தைரியம் இருக்கிறதா?

4 நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஊழல் அற்ற கட்சி என மார் தட்டிக் கொள்ளும் பாஜவின் வேட்பாளர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து?
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ஒரு நாடகம் தான். அதாவது தவறு செய்தவர்கள் அனைவரின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம், பாகுபாடு பார்ப்பதில்லை. எங்களை பொறுத்தவரை அனைவரும் ஒன்றுதான் என்பதுபோல இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இது அனைவருக்குமே தெரியும். இந்தியாவில் உள்ள சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறினீர்கள், ஆனால், அவர்கள் அனைவரும் பாஜவில் ஐக்கியம் ஆனபிறகு நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்கள் அப்பாவிகள் என மோடி விடுவித்து விடுவார். இதுவும் உலகம் அறிந்த உண்மை.

The post மோடியை போலவே அண்ணாமலை ஒரு சர்வாதிகாரி : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் மூத்த தலைவர் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Modi ,EVKS ,Elangovan ,Congress ,Edappadi Palaniswami ,Chief Minister ,M. K. Stalin ,AIADMK ,Panneer Selvam ,E.V.K.S. ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...