நாமக்கல் அருகே நடத்தை சந்தேகத்தால் பயங்கரம் தனியார் பள்ளி ஆசிரியை சரமாரி வெட்டி கொலை: தூங்கி கொண்டிருந்தபோது கணவன் வெறிச்செயல்

நாமக்கல்: நாமக்கல் அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், தூங்கிக் கொண்டிருந்த போது, தனியார் பள்ளி ஆசிரியையை கணவன் சரமாரி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே, தூசூர் சம்பாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரமிளா(37). நாமக்கல்லை அடுத்துள்ள ரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ராஜா, அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த ராஜா, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், இருவரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர். விடிய விடிய தூங்காமல் விழித்திருந்த ராஜா, நேற்று அதிகாலை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிரமிளா தலையில், அரிவாளால் சரமாரி வெட்டினார். இதில், ரத்த  வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.  இதையடுத்து, ராஜா அங்கிருந்து நாமக்கல் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறுகையில், ‘திருமணத்துக்கு பின்னர் தான், பிரமிளா பி.எட்., படித்துள்ளர். ராஜா தான் செலவு செய்து மனைவியை படிக்க வைத்துள்ளார். படித்து முடித்த பின்னர், தனியார் பள்ளியில் வேலையும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், அதன் பிறகு மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 5 மாதத்துக்கு முன்பும், மனைவியை கொல்ல ராஜா முயன்றுள்ளார்’ என்றனர்.

Related Stories: