மும்பை: இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில், ஹூடா - அக்சர் ஜோடியின் அதிரடியால் இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியில் ஷிவம் மாவி, ஷுப்மன் கில் அறிமுகமாகினர். இஷான் கிஷன், கில் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். கில், சூரியகுமார் தலா 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, சஞ்சு சாம்சன் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இஷான் கிஷன் 37 ரன் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஹர்திக் பாண்டியா 29 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 14.1 ஓவரில் 94 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், தீபக் ஹூடா - அக்சர் படேல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 68 ரன் சேர்க்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. ஹூடா 41 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் 31 ரன்னுடன் (20 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் மதுஷங்கா, தீக்ஷனா, கருணரத்னே, தனஞ்ஜெயா, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.