பிரிஸ்பேன்: யுனைட்டட் கோப்பை டென்னிஸ் தொடரின் இ பிரிவு லீக் சுற்றில் நார்வே அணியுடன் மோதிய இத்தாலி 2-0 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலியாவில் 18 நாடுகள் பங்கேற்கும் யுனைட்டட் கோப்பை குழு டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த இ பிரிவு ஆட்டத்தில் இத்தாலி - நார்வே அணிகள் களம் கண்டன. முதலில் நடந்த மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலி வீராங்கைன மார்டினா டிரெவிசன் (29வயது, 27வது ரேங்க்), நார்வேயின் மலீன் ஹெல்கோ (23 வயது, 321வது ரேங்க்) மோதினர்.
விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் டிரெவிசன் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடி டிரெவிசனின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஹெல்கோ 6-3 என வென்று சமநிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.
3 மணி 2 நிமிடங்களுக்கு நீடித்த இப்போட்டியில் 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் டிரெவிசன் போராடி வென்றார். தொடர்ந்து நடந்த ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி (20 வயது, 23வது ரேங்க்) நார்வேயின் விக்டர் துரசோவிச்சை (25வயது, 343வது ரேங்க்) 7-6 (9-7), 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இப்போட்டி, ஒரு மணி 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதன் மூலம், இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் நார்வே அணியை சாய்த்தது. இ பிரிவு புள்ளிப் பட்டியலில் இத்தாலி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நார்வே அணி 3வது இடத்தில் உள்ளது.
நடால் மீண்டும் அதிர்ச்சி: பி பிரிவில் ஸ்பெயின் - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடந்த லீக் போட்டி 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயினின் பாரிசாஸ் டயஸ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் இங்லிஸை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்த, ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் 6-3, 1-6, 5-7 என்ற செட் கணக்கில் ஆஸி.யின் டி மினாரிடம் போராடி தோற்றார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கேமரான் நோரியிடம் நடால் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.