மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் சிறைக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 10 போலீசார் உட்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடஅமெரிக்காவின் வடக்கு மெக்சிகன் எல்லை நகரமான ஜுவாரெஸில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச் சாலைக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்த அடையாளம் தெரியாத கும்பல், சிறைக்குள் இருந்த 14 பேரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். அவர்களில் 10 பேர் சிறையின் பாதுகாப்பு பணியாளர்கள் (போலீசார்), நான்கு கைதிகள் என மொத்தம் 14 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
24 கைதிகள் தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மெக்சிகன் அதிகாரிகள் கூறுகையில், ‘கவச வாகனங்களில் சிறைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் முழு விபரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் விரட்டினர். அப்போது தீவிரவாதிகள் 4 பேரை பாதுகாப்பு படையினர் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது’ என்றனர்.
