சிவகாசி அருகே புதைந்து கிடந்த கண்மாயை தூர்வாரி சீரமைத்த இளைஞர்கள்: இணையத்தில் குவியும் பாராட்டுகள்

சிவகாசி: சிவகாசி அருகே புதைந்து கிடந்த கண்மாயை கண்டுபிடித்து தூர்வாரி தண்ணீரை சேமித்து காட்டி சாதித்த இளைஞர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகின்றது. சிவகாசியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான குளங்கள் கண்மாய்கள் இருந்தன. ஆக்கிரமிப்பு காரணமாக பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் அதன் இருந்த சுவடுகள் தெரியாக அளவிற்கு காண முடியவில்லை. இதனால் சிவகாசியில்கடந்த காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு மேல் தோண்டினால் மட்டுமே கிடைத்தது.

இதன் காரணமாக சிவகாசி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியது.  இந்த நிலையை மாற்றி சிவகாசியை பசுமையாக்க சமீப காலமாக சிவகாசியை சேர்ந்த  தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் கூட்டு முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளனர். சிவகாசியை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகள் சிவகாசி பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரியதால் தற்போது நகருக்குள் 250 அடியிலும், புறநகரில் 50 அடியிலும் நிலத்தடி நீர்மட்டம் கிடைக்கின்றது. அந்த வகையில் சிவகாசியை சேர்ந்த 15 இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வலர்கள் குழு ஒன்று விஸ்வநத்தம் கிராமத்தின் அருகே சுமார் 60 ஏக்கரில் கண்மாய் புதைந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

ஊராட்சி, நிர்வாகம், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு கண்மாயை இரவுபகல் பாராமல் தூர் வாரினர். சுமார் 6 மாதகால உழைப்பிற்கு பின்னர் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 7அடிவரை தோண்டினர். மேலும் கண்மாயில்  மியாவாக்கி முறையில் புங்கன், தான்சி, விலாம், கருங்காளி,செண்பகம் மகிழம் இலவம்பஞ்சு உட்பட 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த கண்மாய் தற்போது நீர்நிறைந்து பசுமையாக காட்சியளிக்கின்றது.

Related Stories: