கடந்த மாதம் மழையால் பாதிப்பு; வேதாரண்யத்தில் 9ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி துவக்கம்: தொழிலாளர்கள் மும்முரம்

வேதாரண்யம்: கடந்த மாதம் மழையால் பாதிப்பால் வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி துவங்கி உள்ளது. நிர்ணயித்த இலக்கை எட்ட தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 850 பேர், 3 ஆயிரம் ஏக்கரில் உணவு உப்பு தயார் செய்து வருகின்றனர். மீதம் உள்ள 6 ஆயிரம் ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றனர். ஆண்டு தோறும் இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் உப்பளத்தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் வேலை இழந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு பிறகு மீண்டும் வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பள பாத்திகள் சரி செய்யப்பட்டு, மீண்டும் உப்பு உற்பத்திக்கான முதல் கட்ட பணிகளான பாத்தி அமைத்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கியுள்ளது.

கடந்தாண்டு ஜனவரியில் மழை துவங்கி விட்டு விட்டு பெய்து வந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பிற்கு நல்ல விலை இருந்தும் உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு பகல் பாராமல் உப்பள பகுதிகளில் முழுவீச்சில் தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர். இந்த ஆண்டு உப்புள பகுதியில் கடந்த ஆண்டு போல உப்பு பாத்திகளை சரி செய்வதற்கு மண் அடிக்க முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பாத்திகளில் உள்ள மணலையே எடுத்து புதிதாக உருவாக்கப்படும் பாத்திகளுக்கு மண்ணை போட்டு சரி செய்கின்றனர்.

புதிதாக மண் பரப்ப முடியாத நிலையில், பழைய மண்ணை போட்டு பாத்திகளை தயார் செய்வதால் உப்பு வெள்ளையாக இருக்காது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் உள்ளனர். உப்பளங்களுக்கு மட்டுமாவது மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: