×

வெற்றி பசியில் பாகிஸ்தான், நியூசி: இன்று தொடங்குது கடைசி டெஸ்ட்

கராச்சி: பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  நியூசி அணி 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆன நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் இன்று கராச்சியில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில்  2 அணிகளும் நன்றாக விளையாடி ரன் குவித்தன. ஆனாலும் வில்லியம்சன்  இரட்டைச் சதத்தால் நியூசி கை ஒங்கி இருந்ததை மறுப்பதற்கில்லை

அதை சமாளித்து டிரா கண்டது பாகிஸ்தான். ஆனாலும் கடந்த 3 தொடர்களை சொந்த மண்ணில் விளையாடியும்,  ஒன்றைக் கூட பாக் கைப்பற்றவில்லை.  இலங்கை உடனான தொடர் மட்டும் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. அடுத்து நடந்த ஆஸ்திரேலியா உடனான தொடரை 1-0 என்ற கணக்கிலும்,  இங்கிலாந்து உடனான தொடரை 3-0 என்ற கணக்கிலும் இழந்த பாகிஸ்தான் இரண்டிலும் ஒயிட்வாஷ் ஆனது.

இப்போது நியூசியுடனும் முதல் டெஸ்ட்டை டிரா செய்துள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கும் 2வது டெஸ்ட்டில் வென்றால்  பாக்  தொடரை  கைப்பற்றும். நியூசி வென்றால் பாக் மீண்டும் தொடரை இழக்கும். அதனால் பாபர் அஸம் தலைமையிலான பாக் அணி இன்று லேசான மாற்றங்களுடன், வெற்றி அவசியம் என்ற இலக்குடன் களம் காண உள்ளது.

அதற்கேற்ப  டிம் சவுத்தீ தலைமையிலான நியூசியும், வழக்கமான அதிரடியுடன் இந்த டெஸ்ட்டில் வெல்வதுடன்  தொடரையும் வெல்ல முனைப்புக் காட்டும். காரணம் பாகிஸ்தான் போலவே நியூசியும் கடைசியாக விளையாடிய  5 டெஸ்களில் தலா 4ல் தோல்வியும், தலா ஒன்றில் டிராவும் பதிவு செய்துள்ளன.
அதனால் 2 அணிகளும் வெற்றி பசியில் இருப்பதால், இன்று தொடங்கும்  இந்த  கடைசி டெஸ்ட்டில்  பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இது டெஸ்ட் கணக்கு
* பாகிஸ்தான், நியூசி அணிகள் 1955முதல் இதுவரை 61 டெஸ்ட்  ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில் 25ல் பாக், 14ல் நியூசியும் வென்றுள்ளன. மேலும் 22 டெஸ்ட்கள் டிராவாகி உள்ளன.
* பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட்களில் 2ல் மட்டுமே நியூசி வென்றுள்ளது. அதே நேரத்தில் பாக் 13டெஸ்ட்களில் வெற்றிப் பெற்றுள்ளது.
* இந்த 2 அணிகளுக்கு இடையில் இதற்கு முன் நடைபெற்ற 24 டெஸ்ட் தொடர்களில்  பாக் 13 தொடர்களில் வென்றுள்ளது. நியூசி 5 தொடர்களை கைப்பற்றி உள்ளது. கூடவே 6 தொடர்கள் டிராவில் முடிந்தன.
* கடைசியாக நடைபெற்ற 3 டெஸ்ட் தொடர்களையும் நியூசிலாந்துதான் வென்றுள்ளது.

Tags : Pakistan ,Newsi , Pakistan, New Zealand hungry for victory, last Test
× RELATED பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி