×

பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலி; திருப்பதியில் ஏகாதசி தரிசனத்துக்கு முன்கூட்டியே டிக்கெட் வினியோகம்: அறைகளின்றி 4 நாள் காத்திருக்கும் சூழ்நிலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி இன்று அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆகம பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வரும் 11ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஏற்கனவே 2 லட்சம் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பக்தர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் என 10 நாட்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் இலவச டிக்கெட் நேற்று மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் உள்ள 96 கவுண்டர்கள் மூலம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே திருப்பதியில் உள்ள அந்தந்த டிக்கெட் கவுண்டர்கள் முன் திரள தொடங்கினர்.

இந்நிலையில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று மதியம் 2 மணிக்கு டிக்கெட் வழங்கும் பணியை நேற்று அதிகாலை 3 மணி முதல் தேவஸ்தானம் திடீரென தொடங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று மதியம் 3 மணி நிலவரப்படி 2, 3, 4, 5 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 10 நாட்களுக்குரிய டோக்கன்கள்  வழங்கப்படுவதால்  அதில் உள்ள தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் இலவச டோக்கன்கள் பெற்றிருந்தாலும் 3 அல்லது 4 நாட்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருமலையிலும் திருப்பதியிலும் அறைகள் கிடைக்காத பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர். மேலும், பல பக்தர்கள் மீண்டும் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்று, டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் சுவாமி தரிசன செய்ய முடிவு செய்து புறப்பட்டு சென்றனர்.

ரூ.4.03 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 460 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.4.03 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 15 அறைகள் பக்தர்களால் நிரம்பியது. இதனால், பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Tags : Ekadasi ,Visionam ,Tirupathi , Increase in pilgrims, Tirupati, Ekadasi, ticket distribution,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...