×

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பன்ட் படுகாயம்

டேராடூன்: இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பன்ட் (25 வயது), கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கீ சென்றபோது, பன்ட் ஓட்டிச் சென்ற கார் நேற்று காலை 5.30 மணியளவில் சாலை தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் தீப்பிடித்த கார் முழுவதுமாகப் பற்றி எரிந்து சாம்பலான நிலையில், அதிர்ஷ்டவசமாக பன்ட் காரில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட இறங்கி உயிர் தப்பினார். எனினும், இந்த விபத்தில் அவரது நெற்றி, வலது முழங்கால், வலது கை மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் கட்டை விரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதுகுப் பகுதியிலும் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

ரூர்கீயில் உள்ள சாக்‌ஷம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக டேராடூன் மேக்ஸ் மருத்துவமனைக்கு பன்ட் மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், எலும்பு முறிவோ அல்லது தீக்காயங்களோ இல்லாத நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைக்குப் பின்னர் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்ற பன்ட், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பன்ட் விரைவில் குணமாகி பூரண உடல்நலம் பெற வேண்டும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் பதிந்து வருகின்றனர். இலங்கை அணியுடன் நடக்க உள்ள டி20, ஒருநாள் போட்டித் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு இருந்தது. பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கு முழுவீச்சில் தயாராவதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் தீவிர பயிற்சி மேற்கொள்ள இருந்த நிலையில், பன்ட் படுகாயம் அடைந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

Tags : Pant , Indian cricketer Pant injured in car accident
× RELATED நியூசிலாந்துடன் முதல் ஓடிஐ இந்தியா அமோக வெற்றி: கோஹ்லி 93 ரன் விளாசல்