×

குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிப்பு

வடலூர்: குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு, 12வது வார்டு, 15வது வார்டுகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள தெருக்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இவை குப்பைகளில் இருக்கும் கழிவு பொருட்களை சாப்பிட்டும் தெருக்களில் அசுத்தம் செய்தும் வீடுகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தியும் வந்தன. கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் சுற்றித் திரிந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதையடுத்து பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், பேரூராட்சி தலைவர் தலைமையில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கெரண்டு நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், குறிஞ்சிப்பாடியில் வரும் 2023ம் ஆண்டில் பன்றிகள் இல்லாத பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டனர். பின்னர் பன்றிகள் கூட்டமாக மேய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகளை முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதத்தில் 25 பன்றிகளை பிடித்தனர். இரண்டாம் கட்டமாக நேற்று 20 பன்றிகள் என மொத்தம் 45 பன்றிகள் பிடிக்கப்பட்டன.


Tags : Kurinchipadi , Pigs roaming on the roads in Kurinchipadi municipality were captured
× RELATED என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு...