×

போடி - தேனி அகல ரயில் பாதையில் 120 கிமீ வேகத்தில் சோதனை ரயில் ஓட்டம்

*சிஆர்எஸ் அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆய்வு

போடி : போடி - தேனி அகல ரயில் பாதையில் 120 கிமீ வேகத்தில் சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆய்வு நடத்தினர். மதுரை - போடி அகல ரயில்பாதை பணிகளில், மதுரையில் இருந்து தேனி வரை 75 கிமீ தூரத்திற்கு பணிகள் முழுமையாக முடிவடைந்தன. இதனையடுத்து கடந்த மே 28ம் தேதி முதல் மதுரை - தேனிக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது தேனியில் இருந்து போடி வரையிலான 15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் ஏற்கனவே ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. நேற்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராவ், கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி குப்தா, தலைமை தொலை தொடர்பு பொறியாளர் இளம் பூரணன் ஆகியோர் 15 கிமீ தூரத்திற்கு இடையில் உள்ள வாழையாத்துப்பட்டி, துரைராஜபுரம் காலனி, அணைக்கரைப்பட்டி, சன்னாசிபுரம் செட் ரயில்வே ஸ்டேஷன் வரையில் உள்ள பாலங்கள், ரயில்வே கேட், ரயில்வே டிராக்கில் உள்ள ஜங்ஷன்கள் மற்றும் சிக்னல்கள், தடுப்புச் சுவர்கள் எவ்வாறு உள்ளது? ரயில் வேகத்தில் அதிர்வு குறைபாடுகள் உள்ளதா என 3 மணி நேரமாக டிராலியில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் மதியம் 3.30 மணிக்கு தயாராக இருந்த 3 பெட்டிகள் கொண்ட ரயில் இன்ஜினை 120 கிமீ வேகத்தில் அதிவேகமாக ஓட விட்டு இறுதிக்கட்ட சோதனை செய்தனர். இந்த சோதனை ரயில் சரியாக 9 நிமிடங்களில் தேனி ரயில்வே ஸ்டேஷன் சென்றடைந்தது. வரும் ஜனவரியில் ரயில்வே பயணிகள் சேவை துவக்கப்பட்டவுடன், போடியிலிருந்து சென்னை, பெங்களூரூ, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக வழித்தடங்கள் விடப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்தனர்.

Tags : Bodi ,- Theni , Bodi, Theni,Test train run,Broad gauge railway
× RELATED போடி தாசில்தார் அலுவலகத்திற்கு...