×

வியாசர்பாடியில் பயங்கரம்; வீட்டில் தனியாக வசித்த முதியவர் கொலை: ரூ70 ஆயிரத்துடன் தப்பிய மர்ம நபர்களுக்கு வலை

பெரம்பூர்: வியாசர்பாடியில் தனியாக வசித்த முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த ரூ70 ஆயிரத்துடன் தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வியாசர்பாடி நியூ மெகசின்புரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (73). இவருக்கு வியாசர்பாடி, கொடுங்கையூர், மிண்ட், பாரதி நகர்  உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. அந்த 4 வீட்டு வாடகைகளை வைத்துக் கொண்டு, வீடுகளை பராமரித்து வருகிறார். இவரது மனைவி ராதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ராஜா என்ற மகன் உள்ளார்.

இவர் திருமணமாகி எம்கேபி நகர் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த திங்கட்கிழமை ராஜா காரைக்குடிக்கு அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், பன்னீர்செல்வம் வியாசர்பாடி உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். ராஜா தனது தந்தை பன்னீர்செல்வத்தை அடிக்கடி வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடைசியாக நேற்று முன்தினம் மதியம் பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் குடியிருக்கும் கிளினிக் வைத்துள்ள நபர்கள் பார்த்துள்ளனர்.

அதன் பின்பு பன்னீர்செல்வம் வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் ராஜா அவரது தந்தை பன்னீர்செல்வத்திற்கு போன் செய்துள்ளார் போன் சுவிட்ச் ஆப் என வந்ததால், சந்தேகமடைந்த ராஜா காரைக்குடியில் இருந்து கிளம்பி நேற்று காலை சென்னை வந்த ராஜா தனது தந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, பன்னீர்செல்வம் தலை மற்றும் கழுத்தில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்த ராஜா இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு, தமிழ்வாணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மோப்பநாய் கரிகாலன் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த பன்னீர்செல்வத்தின் செல்போன் மற்றும் வீட்டிலிருந்த ரூ70 ஆயிரம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.

எனவே, பணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும், உயிரிழந்த பன்னீர்செல்வம் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Vyasarabadi , Terror in Vyasarabadi; Murder of old man who lived alone at home: Net for mysterious persons who escaped with Rs 70,000
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...