பழைய குற்றால அருவியில் 50 அடி பள்ளத்தில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய ஹீரோ: துணிச்சலான செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

தென்காசி: பழைய குற்றால அருவியில் 50 அடி பள்ளத்தில் விழுந்த நான்கு வயது சிறுமியை வாலிபர் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்துடன் பழைய குற்றால அருவிக்கு நேற்று வந்தார். இவரது 4 வயது மகள் ஹரிணியை  அருவிக்கரையில் அமர வைத்துவிட்டு பெற்றோர் குளித்துள்ளனர். பின்னர், அருவியின் முன்புறமுள்ள சிறிய தடாகத்தில் சிறுமி இறங்கினாள். தடாகத்திலிருந்து ஆற்றில் தண்ணீர் விழுவதற்கு அமைக்கப்பட்டிருந்த குழாய் போன்ற மடை வழியாக சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டாள். இதனால், சிறுமி அலறி கூச்சலிட்டார். இதை பார்த்து பெற்றோரும் கூச்சலிட்டனர்.

அப்போது, ஒரு வாலிபர் துணிச்சலாக பாறைகள் நிறைந்த ஆற்றின் பள்ளத்தில் வேகமாக இறங்கி சென்று சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார். இதனால், லேசான காயத்துடன் சிறுமி தப்பினாள். சிறுமியை காப்பாற்றிய இளைஞர், விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (27). இவர் நேற்று சவாரி ஏற்றிக் கொண்டு பழைய குற்றாலம் சென்றுள்ளார். காலை 10 மணியளவில் காரை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் தண்ணீரில் சிறுமி அடித்துச் செல்லப்படுவதை பார்த்து ஆற்றில் இறங்கி காப்பாற்றி உள்ளார். நிஜ ஹீரோவாக செயல்பட்டு சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related Stories: