வெளிநாட்டு வீரரை தலைமை பயிற்சியாளராக்க திட்டம்; ராகுல் டிராவிட் பதவிக்கு சிக்கல்: பிசிசிஐ சூசகம்

மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். இவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில், தொடர்ந்து வீரர்களை மாற்றி மாற்றி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காததால்தான், தொடர்ச்சியான தோல்வியை ஐசிசி தொடர்களில் இந்தியா சந்தித்ததற்கு காரணம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தற்போது அவரது தலைமை பயிற்சியாளர் பொறுப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அந்த வகையில், பிசிசிஐ புதிய தலைமை பயிற்சியாளராக வெளிநாட்டவரை பணியமர்த்த திட்டமிட்டிருப்பதாகவும், இதனால், டிராவிட் விரைவில் தனது பொறுப்பில் இருந்து விலகுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள ஏதும் வரவில்லை. இதுகுறித்த அனைத்து முடிவுகளும் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் கையில்தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “இன்னும் எதுவும் முடிவாகவில்லை. நாங்கள் பல வழிகளை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டங்களில் ராகுல் கண்டிப்பாக உள்ளார். ஆனால் அவருக்கும் பணிச்சுமை உள்ளது. எங்களின் முழு கவனமும் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை நோக்கியே இருக்கிறது. உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

எனவே, வெளிப்படையான காரணங்களுக்காக, தற்போது டி20 மீது கவனம் செலுத்தப்படவில்லை. நிறைய விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இறுதி முடிவு கிரிக்கெட் ஆலோசனைக்குழு மற்றும் தேர்வாளர்களிடமும் தான் உள்ளது. மேலும் இதற்கு சிறிது காலம் பிடிக்கும்” என்றார்.

டி20 உலகக்கோப்பைக்கு பின், டிராவிட் பயிற்சியின் கீழ் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால்தான், 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் குறித்து தற்போதே அச்சங்கள் கிளம்பியுள்ளன. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களை விளையாட உள்ளது.

Related Stories: